இலங்கையின் வடக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாய்ப்புகள்
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக இலங்கைக்கான, நோர்வேயின் முன்னாள் சமாதானப் பேச்சு ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகப்பதிவு ஒன்றில், போரினால் வட இலங்கை மிகவும் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
இந்தநிலையில் இப்போது வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கும், பசுமை ஹைட்ரஜன் மற்றும் பச்சை அம்மோனியாவுக்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
சொல்ஹெய்ம் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக செயற்படும் நிலையிலேயே இந்த கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றுக்கான அற்புதமான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள மிக ஆழமற்ற கடல் காற்றுக்கு மிகவும் பொருத்தமானது என்றும் சூரிய சக்திக்கும் பொருத்தமான இடமாக இலங்கை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தராக செயற்படுவதாக கூறப்படும் கூற்றை சொல்ஹெய்ம் நிராகரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |