திலீபன் வெண்கல சிலை அகற்றம் - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம்
தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையை கேள்விக்குள்ளாக்கி, தியாகதீபம் திலீபனின் வெண்கலச் சிலையை அகற்றிச் சென்ற இலங்கை அரச பேரினவாத அடக்குமுறைக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையொன்றும் இன்று(28.09.2026) வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது,
தியாகதீபம் திலீபனின் வெண்கலச் சிலையை காலை 6.30 மணியளவில் அகற்றிச் சென்ற இலங்கை பொலிஸாருக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வழியாக கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழர்களின் உரிமை பறிப்பு நடவடிக்கை
இதுபோன்ற செயற்பாடுகள் நினைவேந்தல் உள்ளிட்ட கூட்டுரிமை செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது தொடர்ந்து இலங்கையை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் சிங்கள பேரினவாதத்தை காட்டுகின்றது.

அத்துடன், தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்து, அவர்களின் உரிமைக்காக போராடிய ஒருவரை நினைவு கூர்வது, தமிழர்களின் உரிமையாகவே பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு தமிழர்களின் உரிமைகளை பறிப்பது, சிலைகளை அகற்றுவது அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சிங்கள பேரினவாதத்தையே காட்டி நிற்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
