குற்றவாளிகள் மீதான பொலிஸாரின் அடக்குமுறையை விமர்சிக்கும் சில மதத் தலைவர்கள் : டிரான் அலஸ் குற்றச்சாட்டு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களுடன் தொடர்புகளைப் பேணிக் கொண்டிருக்கும் சில மதத் தலைவர்கள் கூட குற்றவாளிகள் மீதான பொலிஸாரின் அடக்குமுறையை விமர்சிக்கும் வகையில் செயற்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அத்துடன் பொலிஸாரின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் அரசியல்வாதிகளும் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
இது பொலிஸாரின் நடவடிக்கையை திசை திருப்புவதற்காகவே உள்ளது.
அத்துடன் தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உட்பட பல்வேறு சவால்களை இந்தச் செயல்பாட்டின்போது எதிர்கொள்ளப்படுகிறது.
எனினும் அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு, அமைச்சர் என்ற வகையில் நான் உறுதியாக உள்ளேன்.
மேலும் முதலில் இந்த பொறுப்பை நான் ஏற்க விரும்பாத போதிலும் முன்னாள் ஜனாதிபதி இந்த பொறுப்பை எனக்கு வழங்கியுள்ளார்" என அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |