யாழ். மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியிலிருந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு
யாழ். மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்து வந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கபட்டு மக்களின் பயன்பாட்டிற்காக இன்றையதினம்(01.05.2025) ஒப்படைக்கப்பட்டன.
யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத் அவர்களினால் யாழ். மாவட்ட செயலர் பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் இன்றையதினம்(01.05.2025) முற்பகல் 11.30 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
இது தொடர்பில் யாழ். மாவட்ட செயலர் கூறுகையில் - வலி வடக்கு வயாவிளான் பகுதியில் 20 ஏக்கர் காணிகளும் மாங்கொல்லை பகுதியில் 15 வடமராட்சி கற்கோவளம் பகுதியில் 5.7 ஏக்கர் காணி நிலமுமாக சுமார் 40.7 ஏக்கர் காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டன.
வெடிபொருட்கள் அபாயம்
இதனையடுத்து, தெல்லிப்பளை ஜே/233 பகுதியில் 47 குடும்பங்களும் வயாவிளான் பகுதியில் 55 குடும்பங்களும் தமது பூர்வீக நிலங்களுக்கு செல்லவுள்ளனர்.
இதேவேளை, குறித்த காணிகளில் வெடிபொருட்கள் அபாயம் தொடர்பில் ஆராய்வு செய்யப்பட்டு அதன் பின்னர் மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
இதேவேளை, மேலும் சில காணிகளும் விரைவில் விடுவிக்கப்பட இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் மேலதிக அரச அதிபர் (காணி) ஸ்ரீமோகன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர், பருத்தித்துறை பிரதேச செயலர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



