4 தமிழ் இளைஞர்களின் உயிரை பறித்த கோர விபத்துக்கான காரணம்: பொலிஸார் வெளியிட்ட தகவல்
அனுராதபுரம், மொரகொட பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான வானின் சாரதி தவறான திசையில் வேகமாக வாகனத்தை செலுத்தி வந்தமையே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழ் இளைஞர்கள் பலி
உயிரிழந்த நால்வரும் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மோகன் தேனுஜன், பால கிருஷ்ணன் நிஷாந்தன், பரமேஸ்வரம் சசிகுமார் மற்றும் விமலஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் வானின் சாரதியும் அடங்குவார். உயிரிழந்த மற்ற மூவரும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.
வானில் பயணித்த முல்லைத்தீவு மற்றும் அனுராதபுரம், கலத்தேவ பிரதேசங்களை சேர்ந்த இருவர் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த லொறி சாரதி ஆகியோர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜா-எலவிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற வானும், அனுராதபுரத்திலிருந்து குளியாப்பிட்டி நோக்கிச் சென்ற கொள்கலன் லொறியும் நேற்று அதிகாலை 4.40 மணியளவில் தலாவ பொலிஸ் பிரிவு பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
விபத்து நடந்த நேரத்தில், வானில் சிக்கிய காயமடைந்தவர்களை வெளியே கொண்டு வர, அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உட்பட, வீதியில் பயணித்தவர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் வானில் ஆறு பேர் பயணம் செய்ததாகவும், ஓட்டுநரை தவிர மற்ற அனைவரும் முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம்
வான் தெற்கு நோக்கிச் சென்று எதிர் திசையில் இருந்து வந்த கொள்கலன் லொறியுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
வானின் ஓட்டுநர் தூக்கத்தில் இருந்ததாகவும், வான் தவறான திசையில் அதிக வேகத்தால் வந்தமையால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், விபத்துக்கான காரணம் வானின் ஓட்டுநர் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வானில் பயணித்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
விபத்துடன் லொறி ஓட்டுநர், கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் கைது செய்யப்படவுள்ளார்.
விபத்தில் உயிர் பிழைத்த இருவரில் ஒருவர், அவர்களில் ஒருவர் பலத்த காயமடைந்து, அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார், அதே நேரத்தில் அனுராதபுரம் கலத்தேவ பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.



