நாமலின் கைதினால் கதிகலங்கியுள்ள தென்னிலங்கை - அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பல அரசியல்வாதிகள் கலக்கத்தில் உள்ளதாக அரசியல் விமர்சர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாமலின் கைது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கை, சாதாரண சட்டச் செயல்முறைக்கு அப்பால் ஆழமான அரசியல் நோக்கங்களைக் கொண்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
சட்டவாட்சிக்கும் அரசியல் பழிவாங்கல்களுக்கும் இடையிலான ஆழமாக கோடு இந்த கைதின் மூலம் தெளிவாக வெளிப்படுவதாக அரசியல் தரப்பில் பேசப்படுகிறது.
எதிர்கால அரசியல்
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, நாட்டின் எதிர்கால அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான திருப்புமுனையாக குறிப்பிடப்படுகிறது.

இது தனிநபருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை மட்டுமல்ல எனவும் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புக்கும் வழங்கப்பட்ட ஒரு தீவிரமான செய்தியாகவும் இதனை பார்க்கப்படுகிறது.
இந்தக் கைது நடவடிக்கையின் முக்கிய அடிப்படை காரணமாக ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பரும் பிரபல வணிகருமான நிமல் பெரேராவினால் வழங்கப்பட்ட சாட்சியமே பிரதான காரணமாக குறிப்பிடப்படுகிறது.
குற்றவியல் முறைப்பாட்டுச் கோவையின் 127 வது பிரிவின் கீழ் நீதவான் முன்னிலையில் இரகசியமாக வழங்கப்பட்ட இந்த வாக்குமூலம் மிகமிக கடுமையானதாகக் கருதப்படுகிறது.
பாரிய நிதிப் பரிமாற்றம்
சிங்கப்பூரை சேர்ந்த சேப்ரே விஷன் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கணக்கு ஊடாக 8 லட்சம் அமெரிக்க டொலர் நாமல் ராஜபக்சவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த பாரிய நிதிப் பரிமாற்றம் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன், இது நேரடியாக லஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாற்றாக ஆணைக்குழுவினால் கருதப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.