சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமலின் தற்போதைய நிலை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறைச்சாலையின் பாதுகாப்புமிக்க விசேட அறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாமலின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சிறைச்சாலை வட்டாரங்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் மேலும் 10 கைதிகள் வரை குறித்த அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் நேற்று கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து வழங்கப்பட்ட உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச கைது
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது 8 லட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.