நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் தயார் நிலை:எதிரணியினரை பின் தொடரும் புலனாய்வாளர்கள்
நாடாளுமன்றத்தில் பலம் தொடர்பான சமன் இன்மை ஏற்பட்டு நாடாளுமன்றத்தில் அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை இழந்தால், அதனை முகாமைத்துவம் செய்துக்கொள்ளும் நடவடிக்கையாக நாடாளுமன்ற கூட்டத்தை நிறுத்துவது அல்லது குறுகிய காலத்திற்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்திற்கு சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான தேவைகள் இல்லை எனக் கூறி, புத்தாண்டு விடுமுறையை அடிப்படையாக கொண்டு நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க முடியும் என அரசாங்கத்தின் உயர் மட்டத்தை சேர்ந்த சிலர் யோசனை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் தலைமையில் நாடாளுமன்றத்தில் தனியாக 113 பெரும்பான்மை பலத்தை உருவாக்கும் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இது சம்பந்தமாக கடந்த நாட்களில் கொழும்பில் மூன்று இடங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீரவங்ச தரப்பினர் எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். தமக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை சபாநாயகருக்கு எழுத்து மூலமாக காட்டி, அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர இவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வீரவங்ச தரப்பினர் நடத்தும் பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்களை சேகரிக்க புலனாய்வுப் பிரிவின் சில குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் இரவு பகல் பராது தகவல்களை திரட்டும் நடவடிக்கை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரச புலனாய்வு சேவை மற்றும் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.