எரிபொருள் விநியோகம் கடுமையாக குறைப்பு! எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரின் தகவல்
வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளமையினால் பொதுமக்கள் மட்டுமன்றி, பல எரிபொருள் நிலையங்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று (14.09.2026) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
குறிப்பிடத்தக்க இடைவெளி
அவர் மேலும் தெரிவிக்கையில் , இந்நிறுவனங்களின் எரிபொருள் இறக்குமதிச் செலவுக்கும் விற்பனை விலைக்கும் இடையே குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது. தற்போதைய விலையில் எரிபொருளை விற்பனை செய்வதால் நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்திப்பதாக, பேச்சுவார்த்தைகளின் போது இந்நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இந்த நஷ்டத்தைக் குறைக்கும் முயற்சியாகவே இந்நிறுவனங்கள் சந்தைக்கான எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளன. இந்நிலைமை பொதுமக்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களின் செயல்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தற்போது ஒரு சவாலாக மாறியுள்ளது.

எரிபொருள் விநியோகம்
எரிபொருளைக் கொள்முதல் செய்யத் தங்கள் சொந்த அந்நியச் செலாவணி கையிருப்பை பயன்படுத்துவதாகக் கூறி, அவர்கள் தொடர்ந்து எரிபொருள் விநியோகம் செய்வதாக உறுதியளித்திருந்தனர். நிலையான விலையை நிர்ணயிக்காமல், போட்டித் தன்மை வாய்ந்த விலையில் எரிபொருளை விற்க அனுமதிப்பதாக அரசாங்கம் கூறியிருந்தது.
இருப்பினும், சந்தைக்குள் நுழைந்த பிறகு, அரசாங்கம் நிர்ணயித்த விலையிலேயே எரிபொருளை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்நிறுவனங்கள் தள்ளப்பட்டன. அந்த விலையில் விற்பனை செய்வது நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும், அதைத் தொடர்ந்து மேற்கொள்வது கடினம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். போட்டித்தன்மை வாய்ந்த விலையில் எரிபொருளை விற்க அனுமதிக்கப்பட்டால், இப்பிரச்சினை தீர்க்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.