கிழக்கு மாகாணத்தில் பாரிய நிதிமோசடி : இரா.சாணக்கியன்
கிழக்கு மாகாணத்தில் அப்பாவி மக்களின் 170 கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ள நிதி நிறுவனத்தின் பணிப்பாளரை நாட்டுக்கு கொண்டு வர முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் நான் இந்த சபையில் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை ஒன்று பதிலளியுங்கள் ,இல்லையேல் வாய்மூல விடைக்கான வினாக்கள் முறைமையை இரத்து செய்யுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
170 கோடி ரூபா மோசடி
இந்த கேள்விகளை 2020 செப்டெம்பர் மாதம் முதல் கேட்டுக்கொண்டு வருகின்றேன். நடுத்தர மக்களின் 170 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக குறிப்பிடப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் எம்மிடம் முறையிட்டு,பாராளுமன்றத்தின் ஊடாக பதிலை எதிர்பார்த்துள்ளார்கள்.
2020 முதல் இன்று வரை மூன்று தடவைகள் இந்த கேள்விகளை தொடர்ந்து சமர்ப்பித்துள்ளேன்.ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை.மக்கள் மத்தியில் செல்லும் போது பாதிக்கப்பட்டவர்கள் எம்மிடம் கேள்வி கேட்கிறார்கள். தொடர்ந்து தாமதப்படுத்துவதால் நாங்களும் இதில் தொடர்புபட்டுள்ளோம் என்று பாதிக்கப்பட்டவர்கள சந்தேகிப்பார்கள்.
இதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் பற்றி கேட்கும் போது அதற்கு பதிலளிக்காமல் காலம் தாழ்த்துவது முறையற்றது என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |