ரணிலுக்கு ஆதரவா...!ரஞ்சித் பண்டார மழுப்பல் பதில்
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று(10.04.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், "2024 ஆம் ஆண்டில்தான் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும். அந்தத் தேர்தல் தொடர்பில் எமது கட்சியில் உள்ள சிலர் தனிப்பட்ட ரீதியில் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
கட்சியின் நிலைப்பாடு
அது கட்சியின் நிலைப்பாடு கிடையாது. இது சம்பந்தமாக கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.
மேலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்ற (காகம்) 'கூடு'தான் தம்மைப் பாதுகாத்தது என்பதை இன்று குயில்கள் போல் சுதந்திரமாகச் செயற்படுபவர்கள் மறந்துவிட்டனர்.
முட்டையிடுவதற்கு மீண்டும் காகத்தின் கூட்டுக்குத்தான் வரவேண்டும் என்பதை இந்தக் குயில் குஞ்சுகள் மறந்துவிடக்கூடாது.
அரசில் பதவிகளை வகிக்கும் தமது கட்சியின் சில எம்.பிக்களையும், மொட்டு க் கூட்டணியில் இருந்து வெளியேறிய பங்காளிகளையும் இலக்கு வைத்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
