ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதிக்கு சென்ற இலங்கை ஜனாதிபதி ரணிலின் கடிதம்(Photos)
ஜனாதிபதியின் விசேட தூதுவராக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட், ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதிக்கு (அமீர்) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எழுதியதாக கடிதமொன்றை கையளித்துள்ளார்.
அந்நாட்டின் வௌிநாட்டு அமைச்சரும் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான அப்துல் பின் ஷெய்யத் அல் நஹ்யான் அக்கடிதம் பெற்றுக்கொண்டுள்ளார்.
இரு நாடுகளின் உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல்துறை அமைச்சர் தலைமையிலான கலந்துரையாடல்

இதனைதொடர்ந்து அபுதாபியில் இடம்பெற்ற சந்திப்பில் பல தரப்பு விடயங்கள் குறித்து அமைச்சர் நஸீர் அஹமட்டும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிநாட்டு அமைச்சரும் கலந்துரையுள்ளனர்.
இக்கலந்துரையாடலில், இலங்கையின் பொருளாதார மேம்பாடுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து அமைச்சர் நஸீர் அஹமட் விளக்கியுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்திடம் நஸீர் அஹமட் கோரிக்கை

அத்துடன் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையும் அதற்கான தீர்வுகளையும் எடுத்துரைத்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் உதவிகளை பெறுவது தொடர்பில் அக்கறை செலுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிராந்திய மற்றும் சர்வதேசத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புக்களுடன் பல்துறைகளில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார்.
மேலும் இலங்கை, இவ்வாறான விடயங்களுக்கு ஒத்துழைப்பதில் இலங்கைக்குள்ள ஆர்வங்களையும் இந்த கலந்துரையாடலில் சுட்டிகாட்டியுள்ளார்.
இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கைப் பிரதித்தூதுவர் மேதாவி பீரிஸும் இக்கலந்துரையாடலில் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.