பிரித்தானியாவில் உள்ள வைத்தியரான மகளிடம் செல்லும் முருகன் மற்றும் நளினி
ராஜீவ் காந்தி (Rajiv Gandhi) கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் விடுதலையான முருகன் மற்றும் அவரது மனைவி நளினி ஆகியோர் பிரித்தானியாவில் இருக்கும் தனது மகளிடம் செல்லும் முடிவில் உள்ளதாகவும், இந்த முடிவிற்கு இலங்கை மற்றும் இந்திய அரசு தடைகளை ஏற்படுத்தாது என சட்டத்தரணி புகழேந்தி (Pugalenthi) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தமிழக சிறப்பு அகதி முகாமில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு உயிராபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தினால் இலங்கைக்கு நாடு திரும்பும் முடிவினை எடுத்திருந்தனர்.
அதாவது முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தாங்கள் விரும்பும் நாடுகளுக்கு செல்ல முடியாதவாறு இலங்கை அரசு சர்வதேச நாடுகளுக்கு செல்லும் கடவுச்சீட்டினை வழங்காது, ஒரு வழி கடவுச்சீட்டாக இலங்கைக்குள் மாத்திரம் நுழையும் கடவுச்சீட்டினை வழங்கியிருந்தது.
இதன் காரணமாக அவர்கள் தாங்கள் விரும்பும் நாடுகளுக்கு செல்லும் முடிவிலிருந்து பின்வாங்கி இலங்கைக்கு நாடு திரும்பும் முடிவினை எடுத்திருந்தனர்.
ஒரு குடிமகனுக்கு தான் விரும்பும் வெளிநாடுகளுக்கு சென்றுவரும் அடிப்படை உரிமை காணப்படும் நிலையில், முருகன் இலங்கையிலிருந்து சர்வதேச கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்து பிரித்தானியாவில் உள்ள தனது மகளை காணும் வாய்ப்பினை இலங்கை அரசு தடுக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நளினி இந்தியாவில் இருந்தவாறு பிரித்தானிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்து மகளுடன் இணையும் சட்ட போராட்டம் நிறைவுக்கு வரும் என்றும், இவர்கள் விரைவில் தங்களது மகளுடன் சேர்ந்து சராசரி வாழ்க்கைக்கு பழகிவிடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |