ராஜபக்சவினரின் குடும்ப ஆட்சியும் மக்களால் ஏற்பட்ட திருப்புமுனையும் (Photos)
இலங்கையின் அரசியல் போக்கும் மக்களின் அவலநிலையும் உலகநாடுகளை இலங்கையின் பக்கம் உற்றுநோக்கவைத்துள்ளது. பாரிய மக்கள் புரட்சிக்கு மத்தியில் அரச தலைவர்கள் மக்களால் ஆட்டிவைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கோட்டாபய ராஜபக்ச நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியிலிருந்து கொண்டிருக்கிறார்.
இலங்கையினை பல தலைவர்கள் ஆண்டுவந்தபோதிலும் ராஜபக்சர்களின் குடும்ப ஆட்சி இலங்கையைப் படுகுழியில் தள்ளும் என எந்தவொரு குடிமகனும் அப்போது நினைத்திருக்கவில்லை.
இது இவ்வாறிருக்க இலங்கையின் ஜனாதிபதியாக 2005இல் மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். அப்போது பெரும்பான்மை மக்களின் பார்வையில் இவர் ஒரு சிறந்த தலைவராக மிளிர்ந்தார். தென்னிலங்கை மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு தலைவராக இருந்தார்.
ஆனால் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானதும் இலங்கையில் உள்நாட்டுப்போர் வலுவடைந்தது. இப்போரிலே தமிழீழ விடுதலைப் புலிகளை வீழ்ச்சியடையச்செய்து வடக்கு, கிழக்கை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து முழு நாட்டையும் தம்வசப்படுத்திய பெருமை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையே சாரும்.
மகிந்த ராஜபக்சவின் அரசியல் இராஜதந்திரம்
ஆனால் அரசாங்கத்தால் இந்த உள்நாட்டுப்போரை எவ்வாறு வேற்று நாட்டுடனான போராகவும் தமிழ் மக்களை வேற்று நாட்டு மக்களாகவும் பார்க்க வைத்ததோ அதே அளவுக்கு இந்த யுத்த வெற்றியை தமது ராஜபக்ச குடும்ப வெற்றியாகவும் பார்க்கவைத்தது என்பதே மறுக்கமுடியாத உண்மை.
இத்தகைய யுத்த வெற்றியுடன் கூடிய மூன்று தலைமுறை அரசியல் பின்னணியும் ஒன்றுசேர்ந்ததால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதிக்கு உரிய செல்வாக்கு, அதிகாரம் ஆகியவற்றையும் தாண்டி மிகப்பெரும் செல்வாக்குடைய ஒருவராக மகிந்த ராஜபக்ச வலம்வந்தார்.
அவர் மாத்திரமன்றி சகோதரர்கள் சமல், கோட்டாபய, மகிந்தவின் மகன் நாமல் ஆகிய அனைவரது செல்வாக்கும் மலையளவு வளர்ந்தது. ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு, உடனடியாக இருவருக்கு முக்கியப் பதவி வழங்கவேண்டியிருந்தபோது அதில் ஒருவர் அவருடைய சகோதரரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்சவை பாதுகாப்பு செயலாளராக பதவியமர்த்தினார்.
இவ்வாறு தொடர்ந்த அவர்களின் குடும்ப ஆட்சியில் பெரும்பான்மை சிங்கள மக்களின் மனங்களின் இடம்பிடித்தமையே மீண்டும் 2010இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றியைத் தக்கவைக்கக் காரணமாக அமைந்தது. மகிந்தவை எதிர்த்து, பொது வேட்பாளராக இலங்கை இராணுவத்தின் முன்னாள் தலைமைத்தளபதி சரத் பொன்சேகா நிறுத்தப்பட்டார்.
ஆனால், சரத் பொன்சேகாவைவிட 17 சதவீத வாக்குகளை அதிகம் பெற்று மீண்டும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார். ஒரு காலத்தில் மனித உரிமைகள் போராளியாக அறியப்பட்டு, அரசியலில் முக்கியத்துவம் பெற்ற மகிந்த ராஜபக்ச, 2009 மே மற்றும் அதற்கு முந்தைய மாதங்களில் நடந்த உள்நாட்டு இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களிலும் போர்க் குற்றங்களிலும் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தமிழ் மக்களுக்கு இடம்பெற்ற அநியாயங்களைப் பார்த்துப் பல வெளிநாடுகள் எதிர்ப்புகளைத் தெரிவித்தன. இருந்த போதிலும் இலங்கையில் அவரது அரசியல் அதிகார பலம் வளர்ந்தே சென்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்தை வீழ்த்த பலரது பங்கு இருந்த போதிலும் மகிந்த ராஜபக்சவே முழுக்காரணம் எனப் பெரும்பான்மை மக்களை நம்பவைத்தார்.
இதுவும் அவரது அரசியல் ஆட்டத்தில் ஒரு முக்கிய திட்டம் எனலாம். இவ்வாறே தன்னை அரசியலில் நிலைநிறுத்தப் பல வேலைகளைச் செய்து அரசியலில் உறுதி நிலையை அடைந்ததாக என்னும் தருணம் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பெரிய அரசியல் செல்வாக்கோ, மக்கள் செல்வாக்கோ இல்லாத மைத்திரிபால சிறிசேனவினால் தோற்கடிக்கப்பட்டார்.
அரசியலில் நிலைபெற ராஜபக்சவினரின் திட்டம்
தானே அடுத்தமுறையும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்காகவே இரண்டு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதி ஆக முடியாது என்ற இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் சரத்தை மகிந்த மாற்றியமைத்திருந்தார். இந்த செயற்பாடு மகிந்த ராபக்சவின் அரசியல் அபிலாசையின் உச்சம் எனலாம். எனினும் அது மைத்திரிபால சிறிசேனவினால் 'இருமுறை ஜனாதிபதி பதவி வகித்தவர் மூன்றாவது முறை போட்டியிட முடியாது' என்ற பழைய விதியாகவே திருத்தியமைக்கப்பட்டது.
அத்துடன் ஜனாதிபதி பதவிக்காலமும் ஐந்து ஆண்டுகளிலிருந்து நான்கு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இவ்வாறு அரசியல் வெறியுடன் காத்திருந்த நேரம் 2019 ஆம் ஆண்டு அடுத்த ஜனாதிபதி தேர்தலும் வந்தது. ஆனால் அவர் ஏற்கனவே இரு தடவைகள் ஜனாதிபதியாக இருந்தமையாலும் இடையில் வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சட்டம் மாற்றியமைக்கப்பட்டமையாலும் அவரால் அவ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
இதனால் அவரது சகோதரரான கோட்டாபய ராஜபக்சவை களமிறக்கினார். இவ்வாறு களமிறக்கப்பட்ட சகோதரர் கோட்டாபய ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசவை வீழ்த்தி ஜனாதிபதியானார்.
அச்சமயம் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பதவி விலகிவிட மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவி ஏற்றார். ஒரு நாட்டின் அண்ணா ஜனாதிபதி, தம்பி பிரதமர். ஏனைய சில அமைச்சுப் பதவிகளும் அக்குடும்ப உறுப்பினர்களாக அமைத்தது. இதுவே குடும்ப ஆட்சியின் உச்சம் எனலாம்.
இலங்கையை குடும்ப ஆட்சி சூழ்ந்து கொண்டது என்பதை விட குடும்ப ஆட்சியில் இலங்கை மூழ்கிக்கொண்டது என்பதே உண்மை. ஏனெனில் ராஜபக்ச சகோதரர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட முடிவுகள் இலங்கையைப் பொருளாதார ரீதியாக அதலபாதாளத்துக்குக் கொண்டு சென்றது.
மக்களின் மாற்றமும் அதனால் ஏற்பட்ட புரட்சியும்
இவ்வாறு போன இலங்கையின் பொருளாதார நிலைமை மக்களின் கழுத்தை நெரிக்கத் தொடங்கும் போது தான் பெரும்பான்மை சிங்கள மக்களின் கண்கள் திறக்கப்பட்டன என்று சொன்னால் பொருத்தமானதாக இருக்கும். அதுவரை பொறுமையாக இருந்த மக்கள் அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து மிகப்பெரும் புரட்சி வெடிக்கச் செய்தனர்.
திருப்புமுனையை நோக்கி இலங்கை அரசியல் களம்! 1953 வெகுஜன எழுச்சியும் 2022 போராட்டமும் |
மக்களால் காலிமுகத்திடலில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்களை அமைதியடையச்செய்ய அரசு மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
இன, மொழி தாண்டி மக்கள் ஒன்றிணையாதவரை தமக்குள் அரசியலை நடத்தி வந்த ராஜபக்ச குடும்பம், மக்கள் புரட்சியினை பார்த்து விழி பிதுங்கி நின்றனர். அவர்கள் இதனை தமது அரசியல் வாழ்க்கையில் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள் என்பது மாத்திரம் உண்மை.
மக்களின் கிளர்ச்சியின் உச்சம் இன்று மகிந்த ராஜபக்சவை பதவி விலக வைத்து சொந்த நாட்டிலேயே ஒழிந்து இருக்கச் செய்துள்ளது என்பது இலங்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஆகும். இருப்பினும் ராஜபக்ச குடும்பத்துக்கு அவ்வளவு சீக்கிரம் யாராலும் முடிவுரை எழுதிவிட முடியாது என்பதும் இலை மறை காயாக இருந்து கொண்டிருக்கும் விடயமே. இதனைப் பொறுத்திருந்துதான் பார்க்கமுடியும்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
