திருப்புமுனையை நோக்கி இலங்கை அரசியல் களம்! 1953 வெகுஜன எழுச்சியும் 2022 போராட்டமும்
இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே தடுமாறவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் எகிறிச்செல்லும் நிலையில், பொருட்களை நிர்ணய விலையில் வழங்க முடியாத சூழ்நிலையில் அரசாங்கம் காணப்படுகிறது. மக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழர்கள் ஏன் கோட்டாகோகமவிற்கு செல்வதில்லை |
இதன்போது மரணங்களும் இலங்கையில் பதிவாகியுள்ளன என்பதை மறுக்கமுடியாது. நாட்டில் மின்சாரம், எரிபொருள், எரிவாயு என முக்கிய பல பொருட்கள், சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அதனை விடவும், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளன.
இலங்கையில் 2022 ஆம் ஆண்டு வெடித்துள்ள மக்கள் போராட்டம்
இது இவ்வாறிருக்க அண்டைநாடுகளிடம் பெற்றுக்கொண்ட கடனின் அளவு எகிறிச்சென்றுள்ளது. அரசாங்கத்தின் அராஜகத்தைப் பொறுத்துக் கொள்ளாத மக்கள் அரசாங்கத்துக்கு எதிராகவே திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கோரி மக்கள் வீதிக்கு இறங்கி பாரிய போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
அதிலும் முக்கியமாக நேற்றைய தினம் 2000தொழிற்சங்கங்கள் இணைந்து ஹர்த்தாலுடன் கூடிய பாரிய போராட்டங்களை ஒவ்வொரு மாகாணங்களிலும் முன்னெடுத்துள்ளன.
நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலுடன் கூடிய போராட்டத்தின் பின்னரும் அரசாங்கத்திடமிருந்து சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் தொடர் ஹர்த்தால் போராட்டம் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இது இவ்வாறிருக்க திடீரென நேற்றையதினம் இரவு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் அவசரகால நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ராஜபக்சர்களின் ஆட்சியை விரும்பி வாக்களித்த மக்களே அவர்களை வெறுக்கும் நிலையில், ராஜபக்ச குடும்பத்தையே வீட்டுக்கு அனுப்ப முன்வந்துள்ளமை அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை ஆட்டங்கான வைத்துள்ளது என்றே கூறலாம்.
1953 ஆம் ஆண்டு இடம்பெற்ற வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சி
மக்களின் இக்கிளர்ச்சி போராட்டம் இலங்கை வரலாற்றை மீட்டிப்பார்க்க வைக்கிறது. அதாவது இலங்கையில் இற்றைக்கு 69 ஆண்டுகளுக்கு முன்பாக பிரபலமாக அறியப்பட்ட ஒரு பொதுஜன கிளர்ச்சி (ஹர்த்தால்) வெடித்தது.
1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12, ஆம் திகதி பாரிய ‘ஹர்த்தால்’ கிளர்ச்சி ஏற்பட்டு அப்போதைய அரசாங்கத்தை அதிரச்செய்திருந்ததோடு ஒரு பாரிய அரசியல் திருப்புமுனையையும் ஏற்படுத்தியிருந்தது.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற முதலாவது பாரிய ‘ஹர்த்தால்’ நடவடிக்கையாகவும் இதுவே கருதப்படுகின்றது.
அப்போது ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசாங்கமே ஆட்சியிலிருந்தது. இந்த கசப்பான சம்பவம் தற்போது கிளர்ந்தெழுந்துள்ள தொழிலாளர் வர்க்கத்தினருக்கு பாரிய பாடத்தைப் புகட்டவல்லது.
சர்வதேச அளவில் 1953ஆம் ஆண்டு என்பதை அப்போதிருந்த எவராலும் இலகுவாக மறந்துவிடமுடியாது. சோவியத் அதிகாரத்துவத்தால் நிறுவப்பட்ட ஸ்ராலினிச அரசாங்கங்களுக்கு எதிராக ஜூன் மாதம் கிழக்கு ஜேர்மனி மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவில் தொழிலாளர்களின் எழுச்சிகள் வெடித்தன.
அதிலும் முக்கியமாக நான்கு மில்லியன் பிரெஞ்சு தொழிலாளர்களின் இரண்டு வார கால பொது வேலைநிறுத்தம் வெடித்தது. இதனால் இலங்கையை மிகப்பெருமளவிலான பொருளாதார நெருக்கடி சூழ்ந்துகொண்டது.
1950ல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆரம்பிக்கப்பட்ட மூன்று வருடக் கடுமையான போரினால், ஸ்திரத்தன்மை சீர்குலைந்து இறப்பர் மற்றும் தேயிலை ஏற்றுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் உயர்வடைந்தது.
இதன்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஜூலை 1953 இல் பொருளாதார ரீதியில் இரக்கமற்ற மாற்றங்களைக் கொண்டுவந்தது. நாட்டின் அரிசிக்கான மானியத்தை நீக்கி, விலையை மூன்று மடங்கு உயர்த்தியது. இது சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்தியது.
பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவை முடிவுக்குக் கொண்டு வந்தது மற்றும் சுகாதாரம் உட்படப் பிற சமூக திட்டங்களுக்கான செலவினங்களைக் குறைத்தது, அதே நேரத்தில் புகையிரத போக்குவரத்து மற்றும் அஞ்சல், தொலைபேசி மற்றும் தந்தி சேவைகளுக்கான கட்டணங்களையும் உயர்த்தியது.
அந்த காலப்பகுதியில் டட்லி சேனாநாயக்க பிரதம அமைச்சராகப் பதவி வகித்ததோடு, நிதி அமைச்சராக ஜே. ஆர். ஜெயவர்த்தன பதவி வகித்திருந்தார்.
நாட்டின் நிதி நிலைமையைச் சமாளிக்க முடியாத அப்போதைய நிதியமைச்சர் ''உங்கள் உணவை நீங்களே பயிரிட்டுக் கொள்ளுங்கள்' என மக்களுக்குப் பணித்தார். பல காலமாக வாழ்க்கையைப் போராட்டமாக எதிர்கொண்டு வாழ்ந்து வந்த மக்களிடையே நிதியமைச்சரின் பணிப்பு அரசாங்கத்தின் மீது மேலும் விரக்தியை உண்டுபண்ணியது.
அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்தை இன ரீதியாகப் பிரித்து நூறாயிரக்கணக்கான இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை இரத்து செய்து மக்களின் பார்வையில் இழிவான நிலைக்குத் தள்ளப்பட்டது.
1953 ஆம் ஆண்டு ஜூலை 23, ஆம் திகதி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு உருவாகிய நிலையில், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறங்களில் கணிசமான ஆதரவைப் பெற்ற லங்கா சம சமாஜக் கட்சி (LSSP), ஆகஸ்ட் 12 அன்று ஒரு நாள் போராட்டத்தை அறிவித்தது. அதாவது அந்நாளைப் பூரண ஹர்த்தாலாக அறிவித்தது.
இந்நிலையில் முற்றாக முடங்கிய இலங்கையில் பல வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. கொதித்தெழுந்த மக்களின் எழுச்சிக்கு அஞ்சி, ஐ.தே.க. அரசின் அமைச்சரவைக்கூட்டம் கூட, நடுக்கடலில் கப்பலில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையிலே அமைச்சரவைக் கூட்டம் கப்பலில் நடந்த வரலாறும் கூடவே பதிவானது. ஆகஸ்ட் 12 ஆம் திகதி தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் தங்கள் கைகளில் பல அதிகாரங்களை எடுத்துக் கொண்டனர்.
இலங்கையின் தலைநகரான கொழும்பில் ஒவ்வொரு நுழைவாயில்களிலும் பொலிஸாரை எதிர்கொள்வதற்கான தடுப்புகளைக் கட்டினார்கள். அதிலும் கிருலப்பனை பாலத்திற்கு அருகில் உள்ள வீதியின் குறுக்கே உள்ள ஒரு தடுப்பில், 80 பொலிஸ் காவலர்களுக்கு எதிராக மக்கள் போராடினர்.
கொழும்பு மற்றும் பிற பிராந்தியங்களுக்கு இடையிலான தந்தி, தொலைபேசி மற்றும் பிற தொடர்பாடல் இணைப்பு கம்பிகளை அறுத்து தடை செய்யப்பட்டன. அப்போது நாட்டில் போக்குவரத்து மற்றும் தபால் சேவைகள் நிறுத்தப்பட்டன. சில புகையிரத தண்டவாளங்கள் ஒரு மைல் அல்லது அதற்கு மேல் அகற்றப்பட்டன மற்றும் சில புகையிரதங்கள் இடை மறிக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டன.
நாடு மக்களால் முற்றுகையிடப்பட்ட நிலையில் அவசரகால விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, இராணுவம் களமிறக்கப்பட்டது. ஒரு நாள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அது சில நாட்கள் நீடிக்கப்பட்டது. கிளர்ச்சியின்போது ஏற்பட்ட முரண்பாடுகளால் சொத்துகளுக்குச் சேதமும் விளைவிக்கப்பட்டதுடன், உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகின.
அவசரகால நிலை நடைமுறையிலிருக்கும் போது போராட்டக்காரர்களைக் கண்டவுடன் சுட்டுத்தள்ளுவதற்கான உத்தரவுடன் இராணுவமும் களமிறக்கப்பட்டது. தொழிலாளர் வர்க்க கட்சிகளின் அலுவலகங்கள் மற்றும் அச்சகங்களுக்குச் சீல் வைக்கப்பட்டதோடு, ஊரடங்கு உத்தரவை விதித்து, சொத்துக்களைச் சேதப்படுத்தியதற்காக மரண தண்டனையையும் அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் அப்போது இலங்கையின் பல பகுதிகளிலும் ஒன்பது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பொலிஸார் சுட்டுக் கொன்றதோடு 175 எதிர்ப்பாளர்களைக் கடுமையாகக் காயப்படுத்தினர். இவ்வாறாகத் தொடர்ந்த மக்களின் வெகுஜன எழுச்சி மற்றும் ஹர்த்தாலின் எதிரொலியாக 1953 ஒக்டோபர் 12 ஆம் திகதி பிரதமர் டட்லி சேனாநாயக்க இராஜினாமா செய்துகொண்டார்.
புதிய பிரதமராகச் சேர் ஜோன் கொத்தலாவல பதவியேற்றார். ஐ.தே.க. ஆட்சி தொடர்ந்தாலும் 1956 தேர்தலில் அக்கட்சி படுதோல்வியைச் சந்தித்தமையே இக்கிளர்ச்சியின் மாபெரும் வெற்றி எனலாம்.
அந்தவகையில் தற்போது ஆட்சியிலுள்ள ராஜபக்சர்களுக்கு எதிராக மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் உலக நாடுகளையே உற்றுநோக்க வைத்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதியால் நேற்றையதினம் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா, அமெரிக்கா மற்றும் லண்டன் போன்ற நாடுகள் முன்வைத்துள்ள கண்டனங்களிலிருந்து இது தெளிவாகியுள்ளது.
இன்று உலக முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடி மற்றும் இலங்கையில் அதன் கூர்மையான வெளிப்பாட்டின் பின்னணியில் 1953 ஹர்த்தாலிலிருந்து தற்போதைய தொழிலாளர் வர்க்கம் படிப்பினைகளைப் பெற வேண்டும்.
இவ்வாறு இலங்கையில் மக்களால் அரசியல் திருப்புமுனைகள் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றின் வரிசையில் தற்போது இடம்பெறும் மக்கள் கிளர்ச்சி பதிவாகுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.