நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ச
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
AFP செய்தி முகவரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது.
#BREAKING Sri Lankan president flies out of country, officials say pic.twitter.com/3RB8M2FAXt
— AFP News Agency (@AFP) July 12, 2022
கொழும்பில் இருந்து அதிகாலையில் கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் செல்லும் இராணுவ விமானம் புறப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளுக்கு மத்தியில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், இந்த விமானம் மாலைத்தீவில் உள்ள மாலே நோக்கிச் சென்றதாகவும், குறித்த விமானம் மாலைத்தீவு நேரப்படி அதிகாலை 2.50 மணிக்கு தரையிறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியாக இருக்கும் போது வழக்கு விசாரணையில் இருந்து விலக்கு பெறும் சர்வாதிகாரத் தலைவர், புதிய நிர்வாகத்தால் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக பதவி விலகுவதற்கு முன் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல விரும்பியதாக நம்பப்படுகிறது.
இதனிடையே, ஜனாதிபதியின் பதவி விலகல் நாட்டில் ஒரு அதிகார வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நிதி அழிவில் இருந்து நாட்டை மீட்டு எடுக்க ஒரு செயல்படும் அரசாங்கம் தேவையாக உள்ளது.
இந்நிலையில், அரசியல்வாதிகள் புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனினும், அவர்கள் இன்னும் உடன்படுவதற்கான அறிகுறிகள் வெளியாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் கொண்டு வருவரும் இடைக்கால அரசாங்கத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதும் தெரியவில்லை என குறிப்பிடப்படுகின்றது. அரசியலமைப்பின்படி, ஜனாதிபதி பதவி விலகினால் அவருக்கு பதிலாக பிரதமர் தான் செயல்பட வேண்டும்.
எனினும், தற்போதைய பிரதமர் நாடாளுமன்றில் செல்வாக்கற்று இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நாடாளுமன்றத்தின் சபாநாயகரே தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்பதற்கான வாய்ப்பு அதிகம் என அரசியலமைப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனினும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ராஜபக்சக்களின் நெருங்கிய ஒருவராக இருப்பதன் காரணமாக அவரது அதிகாரத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது தெரியவில்லை என கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர்கள் 2024ம் ஆண்டின் பிற்பகுதி வரை ஜனாதிபதியான செயற்பட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ ஆய்வாளர் அரூஸ் கூறிய எதிர்வு கூறல் நிஜமானது
நேற்று திங்கட்கிழமை (12.07.2022) லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இராணுவ ஆய்வாளர் பிரித்தானியாவின் வேல்ஸ் இல் இருந்து அரூஸ் அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைத்தீவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.