ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறுவதை தடுக்க சட்டபூர்வ அதிகாரம் இல்லை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் உத்தியோகபூர்வமாக பதவியில் இருப்பதால் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க அதன் உறுப்பினர்களுக்கு சட்டபூர்வமான அதிகாரம் இல்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் (SLIEOA) தெரிவித்துள்ளது.
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஜனாதிபதி ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேற குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் அனுமதி மறுத்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளில் உண்மையில்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 9ம் திகதி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையை ஆக்கிரமித்ததை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான நிலையத்தில் பசிலுக்கு ஏற்பட்ட சிக்கல்
இன்று அதிகாலை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு வெளியேற முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகள் முக்கிய பிரமுகர்களுக்கான சில்க் ரூட் புறப்படும் ஓய்வறையில் அவருக்கு சேவை செய்ய மறுத்ததால், அவர் திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் அதன் உறுப்பினர்கள் பாதுகாப்புக் கவலைகள் மற்றும் உயர்மட்ட பிரமுகர்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்ற பெரும் அழுத்தத்தைக் காரணம் காட்டி சேவைகளை வழங்குவதில் இருந்து பின்வாங்கியுள்ளதாகக் கூறியது.
அதைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் நிதஹாஸ் சேவக சங்கமயவும் (SLNSS) சில்க் ரூட் பகுதியில் உள்ள CIP நடவடிக்கைகளில் இருந்து வெளியேறியது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு காரணமான உயர் அதிகாரிகளுக்கு சேவை வழங்கினால், இலங்கை ஊழியர்கள் தப்பிச் செல்ல முற்பட்டால் பொதுமக்களின் சீற்றத்தை எதிர்கொள்ள நேரிடும் என சங்கத்தின் தலைவர் ஜனக விஜயபதிரத்ன தெரிவித்துள்ளார்.