சம்மாந்துறை பகுதியில் தொடர் சோதனை நடவடிக்கை! பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கையில் 42 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கையானது நேற்று முன்தினம் (19.06.2026) முதல் தொடராக காலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல்
இந்த சோதனை நடவடிக்கையானது கிழக்கு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தவிர, சம்மாந்துறை பள்ளிவாசல் நிர்வாகத்தின் வீதி ஒழுங்கு முறைகள் குறித்து பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தொடர்ச்சியான அறிவித்தல்கள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் சிலரின் சட்டவிரோத நடவடிக்கையினால் மேற்படி திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது, மதுபானம் அருந்தி மோட்டார் சைக்கிள் செலுத்திய ஒருவர் உட்பட தலைக்கவசம் அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல், மோட்டார் சைக்கிளில் மூவர் பாதுகாப்பற்ற முறையில் பயணித்தல், உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர் சோதனை நடவடிக்கைகள்
மேலும், வீதி போக்குவரத்து சட்டங்களை மீறுவோருக்கு எதிராக இவ்வாறான அதிரடி சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்குமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் மூலம் இந்தப் பகுதியில் தொடர்ச்சியாகப் இடம்பெறும் பல விபத்துகளையும் உயிரிழப்புகளும் குறைப்பதுடன் விசேட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் சாரதிகளுக்கு எதிராக மிக விரைவில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிஷாந்த பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.
அத்துடன் தொடர் விசேட திடீர் சோதனை நடவடிக்கையில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலைய அதிகாரிகள் எனப் பலர் பங்கேற்று தத்தமது பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.





