அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை!
மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து சபாநாயகரிடம் கையளித்த கடிதத்திற்கு, ஜனாதிபதி அல்லது அரசாங்கத் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.
இந்த பின்னணியில், எதிர்வரும் நாடாளுமன்ற தீர்க்கமான அரசியல் நடவடிக்கை ஒன்றை எடுப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கலந்துரையாடி வருகின்றன.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை போதாத காரணத்தினால், ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வருவது கடினம் என அனைத்து எதிர்க்கட்சிகள் கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு இடையே தற்போது பொதுவான உடன்பாடு எட்டப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஞாயிறு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தயாரித்து கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நீதிபதி வெற்றிடங்களை உரிய நியமனங்களை மேற்கொள்ளாமை மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பாக ஜனாதிபதியின் தெளிவான நிலைப்பாடு அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான ஓர் பின்னணியில், கொழும்பில் பிரம்மாண்ட சட்ட மாநாடு ஒன்றை நடத்துவது குறித்து சிவில் அமைப்புகள், எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கங்களுக்கு இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து நாளை நடைபெறவுள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் மேலும் கலந்துரையாடப்பட்டு இறுதி உடன்பாடு எட்டப்படும் என அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.