பிரித்தானிய அரசாங்கத்தில் நீடிக்கும் அரசியல் நிச்சயமற்ற தன்மை.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானிய அரசாங்கத்தின் தலைமைப் பதவியில் நீடிக்கும் அரசியல் நிச்சயமற்ற தன்மை, நாட்டின் நிர்வாகத்தைப் பெருமளவில் பாதிப்பதுடன் அரசுக்குக் கூடுதல் நிதிச் சுமையையும் ஏற்படுத்தும் என்று அந்த நாட்டின் முன்னாள் அமைச்சரவை செயலாளரான சைமன் கேஸ் எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற மேக்கர்ஃபீல்ட் (Makerfield) இடைத்தேர்தலில் தொழிற்கட்சியின் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு (Keir Starmer) எதிரான தலைமைத்துவப் போட்டி தீவிரமடைந்துள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை விட்டு விலகுவதற்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என்று அவரது சொந்த அமைச்சரவை சகாக்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
நிச்சயமற்ற தன்மை
ஆனால், தாம் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்றும், சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசியல் சூழல் குறித்து பிபிசி ஊடகத்திடம் பேசிய பிரித்தானியாவின் மிக உயரிய முன்னாள் அரச அதிகாரியான சைமன் கேஸ், "தலைமைத்துவத்தில் நிலவும் இத்தகைய குழப்பங்கள் அரசாங்கத்திற்குப் பெரும் சவாலாகும். இதனால் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கின்றன.
அரசியல்வாதிகள் தங்களுக்குள் அடுத்த தலைவர் யார் என்று விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பொதுமக்களின் மிக முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நேரம் வீணடிக்கப்படுகிறது," என்று கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தகைய அரசியல் குழப்பங்களால் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு போன்ற மிக முக்கியமான முடிவுகள் தள்ளிப்போடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2020 முதல் 2024 வரை நான்கு பிரதமர்களின் கீழ் பணியாற்றிய அனுபவமுள்ள சைமன் கேஸ், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2024 டிசம்பரில் தனது பதவியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.