மலையக மக்களுக்கு தனியான ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும்! இராதாகிருஷ்ணன் எம்.பி. வலியுறுத்தல்
மலையக மக்களின் கல்வி, வாழ்வாதாரம், குடியுரிமை மற்றும் வறுமை உள்ளிட்ட நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், அவர்களுக்கெனத் தனியான ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் மலையக மக்கள் படிப்படியாகப் பல்வேறு உரிமைகளைப் பெற்றிருந்தாலும் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் இன்றும் பல்வேறு சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
நடைமுறைச் சாத்தியமான தீர்வு
மலையக மக்களின் கல்வி, வாழ்வாதாரம், குடியுரிமை, வறுமை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் விரிவாக ஆராய்ந்து அவற்றுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை முன்வைப்பதற்கு இந்த ஆணைக்குழு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்தகால அரசாங்கங்கள் மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கமாவது இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்தி, தனியான ஆணைக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மலையக மக்களும் ஏனைய சமூகங்களுக்கு இணையாகச் சம உரிமையுடனும், சமமான வாழ்வாதாரத்துடனும் கௌரவமாக வாழ்வதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.