எமது அரசின் கீழ் மதவாதத்திற்கு இடம் இல்லை! பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவிப்பு
எமது அரசின் கீழ் இனவாதம் மற்றும் மதவாதத்துக்கு எவ்வித இடமும் வழங்கப்படாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல உறுதியாகத் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று(13.10.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், "பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்துக்குப் பதிலாக மக்கள் நலன் சார்ந்த புதிய அரசியல் கலாசாரத்தையும் சரியான பொருளாதார மேலாண்மையையும் ஏற்படுத்துவோம் என வழங்கிய வாக்குறுதியை எமது அரசு நிறைவேற்றியுள்ளது.
இனவாதம்
கடந்த காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றிய குழுக்கள் தங்கள் தேவைகளுக்கேற்பச் செயற்பட்டன. ஆனால், எமது அரசில் நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.எவரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்லர்.

அரசியல் மேடைகளில் முன்னர் ஒருவருக்கொருவர் எதிராகச் செயற்பட்டு மக்களை ஏமாற்றிய சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க போன்ற தலைவர்கள், வெள்ளத்தில் பாம்பும் கீரியும் ஒரே மரக்கட்டையில் அடித்துச் செல்லப்படுவதைப் போல் இன்று அதிகாரத்துக்காக ஒன்று சேர்ந்துள்ளனர்.
அனைத்து இன, மத மக்களின் பேராதரவோடு ஆட்சியமைத்துள்ள எமது அரசில், மீண்டும் இனம் மற்றும் மதத்தை முன்னிறுத்திச் சில அரசியல்வாதிகள் எழ முயல்வதை அனுமதிக்க முடியாது. இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மின்னிணைப்பு இன்றி அவதியுறும் ஏம்பைக்குளம் கிராம மக்கள் - நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்த ரவிகரன் எம்.பி