மின்னிணைப்பு இன்றி அவதியுறும் ஏம்பைக்குளம் கிராம மக்கள் - நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்த ரவிகரன் எம்.பி
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில், பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட ஏம்பைக்குளம் கிராம மக்கள் மின்னிணைப்பு இன்றி இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று குறித்த பகுதிக்கு நேரில் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மின்னிணைப்பு இன்றி அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

குறிப்பாக ஏம்பைக்குளம் கிராமத்தில் 30 வரையான குடும்பங்கள் வசித்து வருகின்ற போதும், இதுவரை அப்பகுதிக்கு மின்னிணைப்பு வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் கோரிக்கை
மின்னிணைப்பு இன்மையால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள், தமது விவசாய நடவடிக்கைள் என்பவற்றை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், தமது கிராமத்திற்கு மின்னிணைப்பை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன், அப்பகுதி மக்களின் கோரிக்கையினையும் கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், ஏம்பைக்குளம் கிராமத்திற்கு மின்னிணைப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
