உலகக் கோப்பை போட்டியில் இனவெறி சர்ச்சை : நடுவரை நீக்க ஃபிஃபாவுக்குக் கோரிக்கை
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் இனவெறி மற்றும் பாகுபாடுகளைக் கண்காணிக்கும் அமைப்பான 'ஃபேர் நெட்வொர்க்', அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வீடியோ உதவி நடுவர் ஷான் எவன்ஸை உலகக் கோப்பை தொடரிலிருந்து உடனடியாக நீக்குமாறு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பிற்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஜெர்மனி மற்றும் குராசோ அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பின் போது, டல்லாஸ் ஒளிபரப்பு மையத்தில் இருந்த நடுவர் ஷான் எவன்ஸ், கெமராக்கள் தன் மீது திரும்பியபோது தனது வலது கையின் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரலை இணைத்து 'OK' என்ற முத்திரையைக் கீழ்நோக்கிக் காட்டியுள்ளார்.
வெறுப்புச் சின்னத்தை ஒத்த சைகை
இந்த சைகையானது உலகளாவிய தீவிர வலதுசாரி மற்றும் 'வெள்ளையின மேலாதிக்க' குழுக்களால் பயன்படுத்தப்படும் ஒரு வெறுப்புச் சின்னத்தை ஒத்திருப்பதாகக் கூறி ஃபேர் நெட்வொர்க் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த சைகை 'நியோ-நாஜி' கொள்கையை பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ள கண்காணிப்பு அமைப்பு, இத்தகைய உலகளாவிய விளையாட்டுத் திருவிழாவில் கெமராக்கள் தன்னை நோக்கி இருப்பதை அறிந்தே இந்த நடுவர் ஏன் இந்தச் சின்னத்தைப் பயன்படுத்தினார் என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன், இந்த உலகக் கோப்பையில் அவர் மேலும் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

நியூயோர்க்கை தளமாகக் கொண்ட அவதூறு எதிர்ப்பு லீக் அமைப்பு, கடந்த 2019ஆம் ஆண்டிலேயே இந்த சைகையை வெறுப்புச் சின்னங்களின் பட்டியலில் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், ஷான் எவன்ஸ் அரசியல் காரணங்களுக்காக இந்த சைகையைக் காட்டினாரா அல்லது சிறுவர்கள் விளையாடும் 'சர்க்கிள் கேம்' என்ற வேடிக்கை விளையாட்டின் ஒரு பகுதியாகச் செய்தாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஃபிஃபா மற்றும் அவுஸ்திரேலிய கால்பந்து நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ள நிலையில், தொலைக்காட்சி இயக்குநர்கள் தற்போது நேரடி ஒளிபரப்பில் 'VAR' நடுவர் குழுவினரைத் தனியாகக் காண்பிப்பதை நிறுத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.