அநுரவின் மனைவியாக இருந்திருந்தால் பொலிஸார் இதனை செய்திருப்பார்களா..! சிரந்தி தொடர்பில் நீதிமன்றில் கேள்வி
இதுவே அநுர குமார திஸாநாயகவின் மனைவியாக இருந்திருந்தால் பொலிஸார் இத்தகைய அநியாயங்களைச் செய்திருக்க மாட்டார்கள் சிரந்தி ராஜபக்ச தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான சிரந்தி ராஜபக்ச தாக்கல் செய்த முன்பிணை மனுவை மாளிகாகந்த நீதவான் ஜனித்த பெரேரா நிராகரித்துள்ளார்.
அத்துடன், இந்த வழக்கினை விசாரணை செய்யத் தகுந்த பிராந்திய அதிகார வரம்பு கொண்ட நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குற்றச்சாட்டு
2010ஆம் ஆண்டு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டி. ஸ்கேனர் இயந்திரம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகக் கோரிக்கை விடுத்து, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 'சிரிலிய சவிய' கணக்கிற்கு 10 மில்லியன் ரூபாய் நிதியை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்து குற்றவியல் துஸ்பிரயோகம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் அக்டோபர் 05 ஆம் திகதி சிரந்தி ராஜபக்ச சார்பில் முன்பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் குற்றச்செயல் நடைபெற்ற இடம் கொள்ளுப்பிட்டியை அண்மித்த, கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.
எனினும் 2026, அக்டோபர் 06ஆம் திகதியன்று, நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இந்த சம்பவம் தொடர்பான பி அறிக்கை' கோட்டை நீதவான் நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு இந்த மனுவை பரிசீலிக்கும் அதிகார வரம்பு இல்லை என்றும், மனுவைத் தள்ளுபடி செய்யுமாறும் அரசுத் தரப்பு கோரியது. எனினும் ஒரே சம்பவம் தொடர்பாக அரசுத் தரப்பு வெவ்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்து குழப்பத்தை ஏற்படுத்துவதாக சிரந்தி ராஜபக்ச தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
சம்பவம் தொடர்பான கணக்குகள் இந்த நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே முடக்கப்பட்டன. எனவே நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் வாதிட்டார்.

பொலிஸாரின் நடவடிக்கையை விமர்சித்த அவர், துரதிஸ்டவசமாக, இதுவே அநுர குமார திஸாநாயகவின் மனைவியாக இருந்திருந்தால் பொலிஸார் இத்தகைய அநியாயங்களைச் செய்திருக்க மாட்டார்கள் என்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இந்தநிலையில், அனைத்துத் தரப்பு வாதங்களையும் பரிசீலித்த மாளிகாகந்த நீதவான் ஜனித்த பெரேரா, இந்த வழக்கை விசாரணை செய்ய நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை எனக் கூறி முன்பிணை மனுவை நிராகரித்தார். அத்துடன், உரிய அதிகார வரம்பு கொண்ட கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.