அலெக்சி நவால்னியின் ஆதரவாளர்களை கைது செய்யும் ரஷ்ய அரசு: வலுக்கும் எதிர்ப்பு
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணத்திற்கு அவரின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில் அவர்களை ரஷ்ய பொலிஸார் கைதுசெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் ரஷ்யாவில் அலெக்சி நவால்னியின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதன்படி ரஷ்யாவில் இதுவரை 32 நகரகளில் சுமார் 273 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா குற்றச்சாட்டு
இந்நிலையில், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் திடீர் மரணத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினே காரணமென அமெரிக்கா கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அலெக்சி நவால்னி மரணம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில்,
''நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஷ்ய ஜனாதிபதியின் ஊழல்கள், மோசமான செயல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட நவால்னியின் மரணத்தில் சந்தேகம் வலுத்துவருகிறது.
அலெக்சி நவால்னியின் மரணம்
இதற்கு புடின் தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.'' என்றார்.
உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள புடினுக்கு, அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி புடினை கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி.
பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட் அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 19 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனால் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் அவர் சிறை தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.
இதற்கிடையே, ரஷ்ய சிறையில் மர்மமான முறையில் மரணமான அலெக்ஸி நவல்னியின் உடலின் தலை மற்றும் மார்பில் காயங்கள் மற்றும் அடையாளங்கள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு துணை மருத்துவ நிபுணரை கோடிட்டு இந்த செய்தியை முன்னணி செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது.
நவல்னியின் உடல் பிணவறைக்கு வந்தபோது அவரது தலை மற்றும் மார்பில் காயங்கள் இருந்தமையை தாம் கண்டதாக அவர் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் தண்டனைக் குடியிருப்பில் நடைபயிற்சி மேற்கொண்டபோது நவல்னி மயங்கி விழுந்ததாகவும் இதன்போதே அவருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |