அரசியல் வியாபாரத்தை புறம்தள்ளி ஒற்றுமையாக குரல் கொடுங்கள்! காணாமல்போனோர் சங்கம்
நீதிக்காக ஏங்கும் தமிழ் மக்கள் விடயத்தில் அரசியல் வியாபாரத்தை புறந்தள்ளி நீதியை பெற்றுத்தாருங்கள் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஓம்.எம்.பி அலுவலகம் ஒரு கண்துடைப்பிற்காகவே உருவாக்கப்பட்டது. அது சர்வதேசத்தினை ஏமாற்றுவதற்காக அரசின் தந்திரோபாயத்தால் உருவாக்கப்பட்டது. அந்த அலுவலகத்தின் மீது எமக்கு நம்பிக்கையில்லை. அதனை யாருக்காக திறந்தார்கள் என்பது எமக்கு தெரியாது.
கொலையாளிகளிடம் தமிழர்களிற்கு நீதி வழங்குவதற்கான பொறுப்பினை வழங்க முடியுமா என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே இனப்படுகொலையை செய்த இலங்கை அரசுக்கு மன்னிப்பு வழங்காமல் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தி எம் உறவுகளுக்கு சர்வதேசநீதி கிடைப்பதற்கு இணை அனுசரணை நாடுகள் உதவிபுரிய வேண்டும்.
இந்த நெருக்கடியான காலப்பகுதியிலும் எமது சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவியை பொலிசார் விசாரணைக்கு அழைத்துள்ளார்கள். மனித உரிமை அமர்வுகள் இடம்பெற்று கொண்டிருக்கும் சூழலில் கூட இந்த அரசு மீறல்களை அரங்கேற்றி வருகின்றது.
அமைச்சர் தினேஸ் குணவர்த்தன உட்பட பலர் எமது நீதிக்கான போராட்டத்தினை மழுங்கடிப்பதற்காக பல்வேறு பொய்களை கூறி சர்வதேசத்தினை திசைதிருப்பி வருகின்றனர். நாம்12 வருடமாக தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறோம்.
எனவே சர்வதேச நாடுகள் தங்களது நலனுக்காக இலங்கை அரசை பாதுகாக்காமல் மனிதாபிமான அடிப்படையில் எமது பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும். இந்த அமர்விலாவது எமது உறவுகளுக்கு நீதி கிடைப்பதற்கு வழிசமைக்க வேண்டும்.
இன்று தமிழ் அரசியல் வாதிகள் தங்களது கதிரைகளை பாதுகாப்பதற்காக தங்களுக்குள் பேரம்பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அதனை தவிர்த்து மக்களின் விடுதலைக்காக அரசியல் வாதிகளும், பொதுமக்களும் ஒட்டுமொத்த குரலாக ஒலித்து ஒன்றாக செயற்பட வேண்டும்.
நாங்கள் அனுப்பிய கடிதங்களை பார்த்தால் தமிழ்மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக உங்களது அரசியலுக்காக அனுப்பியிருக்கின்றீர்களா என்றே எண்ணத்தோன்றுகின்றது. இலங்கை அரசு புள்ளிவிபர அடிப்படையில் கடிதங்களை அனுப்பியிருக்கின்றது.அது உங்களால் ஏன் முடியாது.
நாடாளுமன்றம் சென்று வெற்று கதை பேசிவிட்டு வருகின்றீர்கள். எமக்காக குரல்கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நாம் பயணித்தோம்.
எனவே தேசியம் பேசிக்கொண்டு பிரிந்து நின்று இனத்துரோகமாக செயற்படாதீர்கள். எமது நீதிக்காக உங்களது அரசியல் வியாபாரத்தை மறுபக்கம் வைத்துவிட்டு நீதியை பெற்றுத்தாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.