காணி அபகரிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்:திம்புலாகல ராகுலாங்கார நாகினி தேரர்(Photos)
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணானை ,ஜெயந்தியாய மற்றும் றிதிதென்ன ஆகிய பிரதேசங்களில் அரச காணிகளை சட்ட விரோதமான முறையில் அபகரித்து வரும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என திம்புலாகல ராகுலாங்கார நாகினி தேரர் தெரிவித்துள்ளார்.
காணி அபகரிப்பு தொடர்பாக பிரதேச மக்கள் திம்புலாகல ராகுலாங்கார நாகினி தேரரருக்கு விடுத்த வேண்டுகோளையடுத்து அங்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது காணிகளில் கட்டடம் கட்டுவோர் மற்றும் சுற்று வேலி இடுவோரிடம் இந்த விடயம் தொடர்பாக கேட்டறிந்து நிலமைகளை அவதானித்துள்ளார்.
இதனைதொடர்ந்து, தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பிரதேச மக்களுடனான சந்திப்பு
மேலும் தெரிவிக்கையில்,“மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணானை, ஜெயந்தியாய மற்றும் றிதிதென்ன ஆகிய பிரதேசங்களில் புகையிரத பாதையை ஊடறுத்து செல்லும் 10 கிலோ மீற்றர் தூரம் கொண்ட அரச காணிகளை அப் பிரதேசங்களைச் சேர்ந்த சிலர் சட்ட விரோதமான முறையில் அபகரித்து வரும் நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் எனவும் இல்லையெனின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளை கவனத்தில் கொண்டு அரசானது சிறுதானிய பயிர் செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக போக்குவரத்து அமைச்சின் கீழ் புகையிரத பாதையினை அண்மித்த நிலங்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்யும் நோக்கில் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக அறிந்த குறித்த பிரதேசங்களைச் சேர்ந்தோர் சிலர் கடந்த ஒரு வார காலமாக புணானை தொடக்கம் றிதிதென்னை வரையுமான சுமார் 10 கிலோ மீற்றர் தூரமுள்ள காணிகளை அபகரித்து சுற்றுவேலி அமைத்து தென்னை மரங்களை நாட்டி, கற்களைக் கொண்டு கட்டிடங்களை அமைத்து அரச கொள்கைக்கு எதிராக செயற்படுகின்றனர்.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
குறித்த பிரதேசங்களில் யானைகளின் நடமாட்டங்கள் காணப்படும் நிலையில் இந்த காணி அபகரிப்பு செயற்பாட்டினால் யானைகளின் வாழ்வியல் செயற்பாட்டிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு இவ்விடயங்களில் சட்டத்திற்கு விரோதமாக புகையிரத திணைக்களத்திற்குரிய காணிகளை அபகரிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும்.

இதேவேளை இந்த சட்டவிரோத காணி அபகரிப்பு தொடர்பாக புகையிரத திணைக்களம் மௌனம் காத்துவருகின்றதுடன் பொலிஸார் சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதில் குழப்பமடைந்து காணப்படுகின்றனர்.
ஆகவே இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”என தெரிவித்துள்ளார்
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri