விவசாய உற்பத்திகளை மேற்கொள்வதற்கு அரச காணிகளை வழங்க தயாராக உள்ளோம்: வாகரை பிரதேச செயலாளர்(Video)
எதிர்பார்க்கப்படும் உணவு பஞ்சத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள். விவசாய உற்பத்திகளை மேற்கொள்வதற்கு அரச காணிகளை வழங்க தயாராக உள்ளோம் என மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் ஜி.அருணன் பொதுமக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பனிச்சங்கேணி, பால்சேனை, கதிரவெளி ஆகிய கிராமங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக தென்னங்கன்றுகளை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நிகழ்வு

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் தலைமையில் இன்று(26) இடம்பெற்றுள்ளது.
சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு, கொகாகோலா பவுண்டேஷன், இளைஞர் அபிவிருத்தி அகம் ஆகியவை கூட்டிணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த திட்டத்தில் தொடர்ந்து பயன் தரும் மரங்கள், பழ மரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் அருணன்,“இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கிராமங்களில் தென்னை உட்பட நீண்டகால பயன் தரும் பழ மரங்கள், உப உணவு பயிர்கள் விநியோகம் ஆகிய திட்டங்கள் இயற்கை சூழலை பேணுவதற்கு உதவும்.
இளைஞர் யுவதிகளுக்கு அழைப்பு

மேலும் மக்கள் போசணை சத்துள்ள உணவுகளை பெற்றுக் கொள்வதற்கும், பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்வதற்கும், உணவு பஞ்சத்தை குறைப்பதற்கும் இந்த திட்டம் உதவும். விவசாய உற்பத்திகளை மேற்கொள்வதற்கு இளைஞர் யுவதிகள் முன்வரவேண்டும்.
ஒரு இலட்சம் காணி துண்டுகள் விநியோக விண்ணப்பத்திலும் இப்பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து மிகக் குறைந்த அளவிலான இளைஞர் யுவதிகளே விண்ணப்பித்திருந்தார்கள்.

எனவே இளைஞர் யுவதிகள் முன்வரும்பட்சத்தில் அந்த நோக்கத்திற்காக அரச காணிகளை வழங்க நாம் தயாராக உள்ளோம்”என கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக அதிகாரிகள், இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின்
அலுவலர்கள் உட்பட பிரதேச பொது மக்களும் கலந்து கொண்டுள்ளனர். 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        