முழுமையாக ஆரம்பிக்கப்படாத மலையக தொடருந்து சேவைகள்: பொதுமக்கள் சிரமம்
மலையகப் பகுதிகளுக்கான தொடருந்து சேவைகள் இதுவரை முழுமையாக வழமையாக்கப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
டித்வா சூறாவளி காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் தொடருந்து சேவை தடைப்பட்ட நிலையில் இன்னும் முழுமையாக ஆரம்பிக்கப்படவில்லை.
பதுளை முதல் அம்பேவலை வரையும், நாவலபிட்டி முதல் வட்டவளை வரையும் சில பகுதிகளில் சேவைகள் பகுதி ரீதியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், முழுமையான தொடருந்து சேவை இன்னும் செயல்பாட்டிற்கு வராத நிலை காணப்படுகிறது.
பொதுமக்கள் சிரமம்
கொட்டகலை முதல் அம்பேவலை வரை மொத்தம் ஆறு இடங்களில் தொடருந்து பாதைகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவற்றில் மூன்று இடங்களில் சீரமைப்பு பணிகள் நேற்றைய 03ஆம் திகதி வரை நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்னும் கொட்டகலை, கிரேட்வெஸ்டன் மற்றும் அம்பேவலை பகுதிகளில் சேதமடைந்துள்ள பாதைகளை அவசரமாக சீரமைத்தால், பதுளை முதல் நாவலபிட்டி வரை முழுமையான தொடருந்து சேவையை மீண்டும் இயக்க முடியும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அவசர நடவடிக்கை
மலையக தொடருந்து சேவை நிறுத்தப்பட்டிருப்பதால், தினசரி பணிப்பயணிகள், மாணவர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மேலும், இந்த நிலைமையால் சுற்றுலா பயணிகளின் வருகையும் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, மீதமுள்ள பாதை சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்தி, மலையகப் பகுதிகளுக்கான தொடருந்து சேவையை உடனடியாக முழுமையாக ஆரம்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.




தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்