பெரும்போக மானிய உரத்தை விரைந்து வழங்க நடவடிக்கை
திருகோணமலையில் பெரும்போக வேளாண்மை செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, மானிய உர விநியோகத்தை முறையாகவும், விரைவாகவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எச்.ஹேமந்தகுமார கோரியுள்ளார்.
மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (அக்டோபர் 25) நடைபெற்ற மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
உர விநியோக ஏற்பாடுகள் உறுதி
தேசிய உர செயலகத்தின் மாவட்டத்திற்கான பிரதிப் பணிப்பாளர் எச்.ஜி.எஸ்.பிரேமரத்ன, பெரும் போக உர விநியோகித்துக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த விவசாயக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், திருகோணமலை மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு பிரச்சினைகள் மற்றும் பிரதேச செயலக விவசாயக் குழுக்கூட்டத்தில் இருந்து மாவட்ட செயலகத்துக்கு முன்மொழியப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகள் எடுக்கப்பட்டன.
செயற்பாட்டுக் குழுக்கள் உருவாக்கம்
அத்தோடு, "உணவுப் பாதுகாப்பு" (food security) மற்றும் "ஏக்க மிட்டட்ட கோவி பிமட்ட" (Eka Mitata Govi Bimata) போன்ற தேசிய வேலைத் திட்டங்களுக்காக செயற்பாட்டுக் குழுக்களும் இக்கூட்டத்தில் உருவாக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், விவசாய அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025