அரசாங்கத்தின் பாலஸ்தீன ஆதரவு நிலையும் தமிழ் தேசிய இனத்திற்கு எதிரான மனநிலையும்!
நாடு இன்னுமொரு தேர்தலை நோக்கி நகர்கிறது. ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலை நோக்கி தீவிரமாக செயற்படுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா பொதுஜன பெரமுன என்பன மாகாணசபையில் தமது ஆதிக்கத்தை தக்க வைக்க முயல்கின்றன. அதற்கான பேரம் பேசல்களும் கட்சி மட்டங்களில் நடக்கின்றன.
ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமது இருப்பை தக்க வைக்க ஊழல் மோசடி விசாரணை, போதைப் பொருள் மாபியாக்களின் விசாரணை உள்ளிட்ட பல்வேறு நீதிமன்ற வழக்குகளை தூசி தட்டி தனது இருப்பை நீடிக்க முயல்கிறது.புதிய அரசியலமைப்பு விடயங்கள் கூட பேசுபொருளாக மாறியுள்ளன.
தமிழ் தேசிய இனம்
இருப்பினும் தென்னிலங்கை கட்சிகள் தமிழ் தேசிய இனத்திற்கு எதிரான மனநிலையிலேயே அவர்கள் தொடர்ந்தும் பயணிப்பதாக தெரிகிறது. உரிமைக்காக போராடும் தமிழ் தேசிய இனத்தின் தாயகப் பகுதிகளிலும் உரிமை அரசியலை தேர்தல் அரசியலாக மாற்றி அதற்கான நகர்வுகள் இடம்பெறுகின்றன.
வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் தமிழ் தேசிய கட்சிகள் தேர்தலுக்காக மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து தமது அரசியல் இரும்புக்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன. தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை குறித்தும் பேச்சுகள் நீள்கிறது. இவை அனைத்தும் தேர்தல் அரசியலை இலக்கு வைத்து நடப்பவை.

முள்ளியவாய்கால் பேரவலத்திற்கு பின்னரான தமிழ் தேசிய அரசியல் தடம் மாறி வெறும் தேர்தலுக்கான அரசியலாக வந்து நிற்கின்றது. இந்த நீடிப்பு ஆரோக்கியமானதல்ல. தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீவிர தமிழ் தேசியத்தை முன்னெடுப்பதாக காட்டுகின்ற போதும் யாழ்ப்பாணத்திற்கு வெளியில் பெரியளவில் மக்கள் திரட்சியை ஏற்படுத்தவில்லை.
தமிழ் தேசிய இனத்தின் உரிமைக் கோரிக்கையானது இன்று முன்வைக்கப்பட்டதல்ல. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே முன்வைக்கப்பட்டு வந்த விடயம்.
ஜனநாயக ரீதியாக தமிழ் தேசிய இனம் தமது உரிமையை கேட்டபோது தென்னிலங்கையின் ஆளும் வர்க்கம் அதனை கண்டு கொள்ளவில்லை. இதன்விளைவாக தமிழ் இளைஞர், யுவதிகள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
அந்த உரிமைப் போராட்டம் சர்வதேசத்தின் கூட்டுடன் 2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரவலத்துடன் முடிவுக்கு வந்தது. அதன்பின் தமிழ் தேசிய அரசியலை மீண்டும் ஜனநாயக வழியிலேயே முன்னெடுக்க வேண்டி ஏற்பட்டது. அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அதன் முன்னாள் தலைவர் இரா.சம்மந்தன் அவர்களும் சரியாக முன்னெடுத்தாரா என்ற கேள்வி இன்று பரவலாக எழுந்துள்ளது.
பொறுப்புக்கூறல்
புலி நீக்க அரசியல், தமிழ் தேசியம் நீக்கம் என்பவற்றை கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசுக்கட்சி செய்து வந்துள்ளது. இது தென்னிலங்கைக்கு கிடைத்த ஒரு வெற்றியும் கூட. இப்பொழுது தமிழ் தேசியம் ஆபத்தான கட்டத்தில் வந்து நிற்கின்றது. அதனை முன்னெடுத்து தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகளைப் பெற்றுக் கொடுப்பது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
மறுபுறம், ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் இம்முறை கொண்டுவரப்பட்ட தீர்மானமும் பலவீனமாக உள்ளதாக தமிழ் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 'இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல்' தொடர்பான தீர்மானம் ஒன்று வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய தீர்மானம் மூலம் சர்வதேச மேற்பார்வை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது எனவே இந்த நீடிக்கப்பட்டுள்ள இரண்டு வருடங்களையும் தமிழர் தரப்பு சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஐ.நா பொதுச் சபையின் 80 ஆவது கூட்டத் தொடரில் ஒரு இறையாண்மை கொண்ட தனி நாடாக பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐ.நாவில் அங்கத்துவம் வகிக்கும் 193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 157 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐ.நா பொதுச் சபையில் இதன்மூலம் 194 நாடுகள் அங்கீகாரம் பெற்றுள்ளன.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு ஆதரவை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ஐ.நா பொதுச் சபையின் 80 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, பாலஸ்தீன மக்களுக்கான தனி அரசுக்கான பிரிக்க முடியாத உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீன மக்களின் நியாயமான பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான தேவைகளை அங்கீகரிப்பதும் அவசியம்.
1967 ஆம் ஆண்டின் எல்லை வரையறையை கொண்டு, இரண்டு நாடுகள் அருகருகே இருப்பதற்கான அடிப்படையை வழங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் படி ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வுக்காக நாம் ஒன்றுபட வேண்டும் எனத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி
இவ்வாறு கருத்து தெரிவித்த ஜனாதிபதி முன்னர் போராட்ட இயக்கமாக ஜே.வி.பி என்ற பெயருடன் இருந்து தென்னிலங்கை ஆளும் வர்க்கத்தால் அவரும் அவரது இயக்கமும் அடக்கி ஒடுக்கப்பட்டு முதன் முறையாக தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சி பீடமேறியுள்ளார்.
போராட்ட வரலாறு மற்றும் அடக்குமுறைகள் குறித்து அவருக்கும் அவரது அரசாங்கத்திற்கும் தெரியும். அதனாலேயே மறைக்கப்பட்டிருந்த பட்டலந்த வதை முகாம் கூட பேசுபொருளானது.
அவ்வாறு இருக்கையில் பாலத்தீனத்திற்கு கருணை காட்டும் ஜனாதிபதியும் அரசாங்கமும் சொந்த நாட்டில் அகதிகளாகவும், உரிமையற்றவாகளாகவும் நின்று போராடும் ஒரு தமிழ் தேசிய இனம் குறித்து கரிசணை காட்ட தயங்குகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும், அங்கு மேற்கொள்ளப்படும் தீர்மானங்களும் அரசியல் இருப்புக்காகவே கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவ்வாறான செயற்பாடுகளில் நாங்கள் ஒருபோதும் ஈடுபடப்போவதில்லை. அதுபோல், அத்தகைய செயற்பாடுகள் ஈடுபடுவதற்கு எவரையும் அனுமதிக்கவும் மாட்டோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்தி விட்டார். ஜெனிவா தீர்மானத்துடன் நாங்கள் உடன்படவில்லை என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலைப்பாட்டில் நாங்கள் எப்போதும் மாற்றங்களைச் செய்ய மாட்டோம்.
கடந்த காலங்களில் இலங்கையின் நீதித்துறையினுடைய சுயாதீனம் தொடர்பில் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் சந்தேகங்கள் இருந்தன. ஆனால், தற்போது நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில், நீதித்துறையிள் சுயாதீனம் எவ்வளவு தூரம் மேம்பட்டுள்ளது என்பதை நாங்கள் நிரூபித்துக் காட்டியுள்ளோம்.
குற்றச்சாட்டு
ஆதலால், இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்குச் சர்வதேசம் தேவையில்லை என்பதே எமது நிலைப்பாடு' என அமைச்சர் நளிந்த குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் நளிந்த கூறுவது போல் உள்நாட்டு பொறிமுறை மூலம் தமிழ் மக்களுக்கு நியாமான தீர்வை தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகள் பூர்த்தியாகும் வகையில் வழங்க முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்பானது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறி ஒரு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்ந்தும் கிடப்பில் உள்ளது.

ஆக தமிழ் மக்கள் குறித்து அரசாங்கம் கரிசனை காட்ட தவறி வருவதுடன், தொடர்ந்தும் தென்னிலஙகையை திருப்திப்படுத்த முயல்கிறது. காஸாவை மிஞ்சியதாக முள்ளிவாய்காலில் இடம்பெற்ற பேரவலம் ஏன் இந்த அரசாங்கத்தின் கண்ணுக்கு புலப்படவில்லை.
சர்வதேச ரீதியில் பாலஸ்தீன விடுதலையில் தலையிட்டு தம்மை நல்லவர்களாக காட்ட முயலும் அனுர அரசாங்கம் சொந்த நாட்டில் வாழும் தமிழ் தேசிய இனத்தின் அரசியல அபிலாசைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அதுவே பல்லின கலாசாரம் கொண்ட இலங்கை தீவை ஒரு நாட்டு மக்களாக அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டு அரசியல், பொருளாதார, அபிவிருத்தி ரீதியாக கட்டியெழுப்ப உதவும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 22 October, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.