நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருட நிறைவினை முன்னிட்டு போராட்டம்
நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருட நிறைவினை முன்னிட்டு அம்பாறை - கல்முனை பகுதியில் இன்று(6) காலை அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன் இதன்போது மக்கள் பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் குறித்து வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் ஊடக வெளியீடு ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.
சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு
குறித்த ஊடக வெளியீட்டில், இலங்கையின் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே அவசியம் 1948இற்குப் பின்னரான இலங்கையின் 75 வருட கால அரசியல் வரலாற்றில், இனத்துவ அரசியலே மேலோங்கி காணப்படுகிறது.
இலங்கை அரசானது சிங்கள பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசாங்கங்களாலும் தலைவர்களாலும் ஆளப்பட்டு வருகிறது. 1948 முதற்கொண்டு ஏனைய தேசிய இனங்களான வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோருக்கு அரச அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்படவில்லை. அரசியல் அதிகாரம் உரிய முறையில் பகிர்ந்துகொள்ளப்படவில்லை.
மாறாக மொழி ரீதியான, மத ரீதியான அடக்குமுறைகள் மேலோங்கின. சுதந்திரம் கிடைத்து ஒருவருடம் நிறைவடைவதற்குள் மலையகத் தமிழர்களுக்கு எதிராக 1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தமிழர்களுக்கு எதிராக 50களில் கிழக்கிலும், மலையகப் பகுதிகளிலும், தெற்கிலும் மேற்கொள்ளப்பட்ட இன வன்முறைகள், சுதந்திரத்துக்குப் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகளில் புறக்கணிக்கப்பட்டமை என இனவாதம் விரிவாகியது.
அதன் உச்சமாக 1956இல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டமானது அரச கட்டமைப்பை சிங்களமாக்கியது. இதுவே, வடக்கு கிழக்கு தமிழர்கள் தமக்கான "சமஷ்டி" முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வை கோரக் காரணமானது.
ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் அரசியல் தீர்வுபற்றி பல உறுதிமொழிகளை தமிழர்களுக்கு வழங்கினாலும், பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. மாறாக இனவாதமும் அடக்குமுறைகளும் அதிகரித்து இறுதியில் தமிழின அழிப்பு யுத்தத்தில் நிறைவுற்றது. போருக்கு பின்னரான காலத்தில் அரசியல் தீர்வுகுறித்து அரசாங்கங்கள் அக்கறை காட்டவில்லை. திடமான அரசியல் தீர்வுக்கான உரையாடல்கள் முன்னெடுக்கப்படாது தமிழ் மக்களின் அரசியல் தளம் வெறுமையானது.
இந்த நிலையை மாற்றி வடக்கு கிழக்கு ரீதியாக மக்கள் மத்தியில் அரசியல் தீர்வுக்கான விழிப்புணர்வையும் உரையாடலையும் ஏற்படுத்தும் நோக்குடன் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி "அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முளைவை ஆரம்பித்தோம்.
மக்கள் திரள் செயற்பாடு
வடக்கு கிழக்கின் கிராமங்கள் நகரங்கள் என 100 இடங்களில் இந்த ஜனநாயக வழிப்பட்ட மக்கள் திரள் செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு 100வது நாளான 2022 நவம்பர் எட்டாம் திகதி "சமஷ்டி அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனத்துடன்" நிறைவேறியது. தற்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய தலைமைத்துவங்களுடன் இலங்கையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. "ஜனநாயகம்", "கட்டமைப்பு மாற்றம்", "இன மத பேதமின்மை" எனும் கொள்கைகளை முன்வைத்து இவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர்.
எனினும் அரசியல் தீர்வு குறித்து தேசிய மக்கள் சக்தி அரசு மௌனம் காத்துவருகிறது. வடக்கு, கிழக்கில் இராணுவமயமாக்கம், காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு, மாகாவலி குடியேற்றம் மற்றும் சிங்கள மயமாக்கம், பௌத்த மயமாக்கம், தமிழ் மொழி உரிமை புறக்கணிப்பு, இனவாத அச்சுறுத்தல்கள் ஆகியன தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இந்த அடக்குமுறைகள் அனைத்தையும் வைத்துக்கொண்டு "இன மத பேதமின்மை" குறித்து அரசு கதைப்பது நேர்மையின்மையாகும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்து வரும் சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை "இன மத பேதமின்மை " எனும் கோஷத்தின் பின்னால் மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது.
மேலும், 2015ஆம் ஆண்டு. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 இல் இலங்கை அரசு இணைப் பங்காளராக இருந்து கையொப்பம் இட்டுள்ளது. இத்தீர்மானத்தின் ஏற்பாடு 20 ஆனது அரசியல் அதிகாரப் பரவலுக்கான இலங்கையின் கடப்பாட்டை கூறுகிறது.
ஆகவே, இனவாதத்தில் சார்ந்திருந்த பழைய அரசுகளைப் போல் இல்லாது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, நிலையானதும் கௌரவமானதும் உரிமைகளுடன் கூடிய சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தும் தீர்வுத் திட்டத்தை உடன் முன்னெடுக்கக் கோருகிறோம். சமஷ்டி அரசியல் தீர்வு என்பது நாட்டைப் பிரிப்பது அல்ல. அது மிகவும் உயரிய ஜனநாயக அரசியல் அமைப்பின் வெளிப்பாடாகும்.
இன அடக்குமுறை, இன அழிப்பு
போருக்குப் பின் ஜனநாயக அரசியலை முன்னெடுத்துவரும் நாடுகள்,எமது அண்டை நாடான நேபாளம் அடங்கலாக, சமஷ்டி முறைமையையே பொருத்தமானதாக ஏற்று நடைமுறைப்படுத்துகின்றன. எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட இன அடக்குமுறையையும் முப்பது வருடகால இன அழிப்பு யுத்தத்தையும் எதிர்கொண்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொருத்தமான அதிகாரப் பகிர்வு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வாகும்.
இதுவே, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் திடமான அரசியல் அபிலாசையாகும்.வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு இலங்கைஎன இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி அச்செய்தி குறிப்பில் குறிப்படப்பட்டுள்ளது.
இது தவிர தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள் மத சுதந்திர மீறல்கள், ஏனைய வன்முறைகள் இடம்பெறாமல் இருப்பதாக இருந்தால் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி இவ் கவனஈர்ப்பு முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் தொடர்ச்சியாக 100 நாட்கள் வடக்கு, கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஊடகங்களுக்க கருத்து தெரிவித்தவர்கள் குறிப்பிட்டனர்.












ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
