வவுனியாவில் பெண்கள் மீது பொலிசார் மிலேச்சத்தனமான தாக்குதல்
வவுனியாவில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டிருந்தமையுடன் பல மணிநேரமாக இரு தரப்பினருக்குமிடையே தர்க்கம் ஏற்பட்டிருந்த டன் வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்ப்பட்டனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர்.
இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.
இதேவேளை கைதுசெய்யப்பட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு இன்றையதினம் போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்ற கட்டளையினை அவமதித்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அமைதிக்கு பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் இருவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு வவுனியாவில் அவரை காண்பதற்காக முற்பட்டவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி தலைமையில் வன்னி மாவட்டங்களுக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் வவுனியாவில் இன்று (05.01.2024) நடைபெற்று வருகிறது.
இதன்போது காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சிலர் ஜனாதிபதியை காண்பதற்காக உள்நுழைய முற்பட்டுள்ளனர்.
இருவர் கைது
இதனை அங்கிருந்த பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில் அவர்களில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து மேலும் அங்கிருந்த காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கறுப்பு துணியை காட்டியவாறு பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.