இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பரில் போராட்டம் - நகரபிதா பகிரங்க அழைப்பு
யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி, எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறையில் நகரசபையின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் நேற்றைய தினம் (28.08.2026) பருத்தித்துறை நகரசபையின் 15ஆவது அமர்வின் போது பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
கவனவீர்ப்புப் போராட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை துறைமுக சந்தியிலிருந்து செப்டெம்பர் 1ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த பேரணி, பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று நிறைவடையும்.
பருத்தித்துறை நகரத்தின் அபிவிருத்திக்குத் தடையாகவும், நகரத்தின் புராதன சின்னங்கள் மற்றும் இடங்களை ஆக்கிரமித்தும் உள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்றக் கோரி இந்த இரண்டாவது கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து அரசியல் தரப்பினர், வர்த்தகர்கள், கடற்றொழில் சங்கங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நகரசபையில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களை தவிர, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக் கட்சி, ஜனநாயக தேசியக் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சுயேச்சைக் குழு (ஊசி) ஆகியவை முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.