அநுரவின் தீர்மானத்திற்கு ஐநா அதிருப்தி.. அரசு வெளியிட்ட திட்டவட்ட அறிவிப்பு
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வைட் எழுப்பிய கவலைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஒகஸ்ட் 21ஆம் திகதி அன்று அனுப்பிய பதில் கடிதத்தில் இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
22வது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை திருத்த சட்டமூலம் ஆகியவை வழக்கின் தேக்கநிலையைக் குறைக்கவும் நீதித்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளவுமே கொண்டுவரப்படுகின்றன என்றும், குறிப்பிட்ட சில நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் நோக்கம் இதில் இல்லை என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் தீர்மானம்..
இத்திட்டத்தின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.

தலைமை நீதிபதியின் பதவிக்காலம் 67 வயது வரை அல்லது நியமிக்கப்பட்ட நாளிலிருந்து 6 ஆண்டுகள் என வரையறுக்கப்படும்.
மேலும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 61 இலிருந்து 63 ஆகவும், ஏனைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 62 ஆகவும் மாற்றப்படவுள்ளதுடன், மேன்முறையீட்டு மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளது.
தற்போது சேவையில் உள்ள நீதிபதிகளுக்கும் இதைப் பயன்படுத்துவது அரசியல் தலையீடாகாது என்றும், அனுபவமிக்க நீதிபதிகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கே இது அவசியம் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பல தரப்பினர் இந்த சட்டமூலங்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்ப்பையும் முழுமையாக மதிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.