இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக பருத்தித்துறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் பருத்தித்துறை துறைமுகத்தடியில் இன்று காலை 8:30 மணியளவில் ஆரம்பமாகி வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் வரை சென்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு
பருத்தித்துறை நகரை மீட்போம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பலரும் தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.
கட்சிகள் தமது முழுமையான ஆதரவை வழங்கிய போதும் தேசிய மக்கள் சக்தியினர் மட்டும் பங்களிப்பு செய்ய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இதன்போது நீண்ட காலமாக பருத்தித்துறை தபால் அலுவலகத்தை முழுமையாக இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும், பருத்தித்துறை நகரின் வரலாற்று சிறப்புமிக்க வெளிச்ச வீட்டில் பல காலமாக இருக்கும் இராணுவத்தினை உடனடியாக வெளியேற்ற வேண்டும், நூற்றாண்டு காலமாக இருக்கும் பருத்தித்துறை நீதிமன்றத்தை இடப்பற்றாக்குறை காரணமாக இடம்மாற்றம் செய்யும் நோக்கம் காணப்படுவதால் இதற்கு முழுமையான காரணமாக இருக்கும் இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மகஜர் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் தொடரும்
இதற்கான தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கூறப்பட்டது.
இதில் ஜனநாயக போராளிகள் கட்சி வேந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பிரதேசசபை தவிசாளர்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.





