காலணியால் தாக்க முயன்ற அதிகாரி - கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்த தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள்
மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் தனித்துணை ஆட்சியரிடம் மருத்துவ விடுப்பு கேட்க சென்ற போது அவரை காலணியால் தாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதிகாரியின் இந்த செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து, இலங்கை தமிழர்கள் தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக சுமாராக ஐந்து மணி நேரம் இலங்கை தமிழர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டமானது நேற்று(10.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்திறங்கிய இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களை கண்காணிப்பதற்காக மண்டபத்தில் தனித்துணை ஆட்சியர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.
போராட்டக்காரர்களின் கோரிக்கை
இலங்கை தமிழர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் தங்கி உள்ள தங்கள் உறவினர்கள் வீட்டுக்கு செல்வதற்கும், மருத்துவம் சிகிச்சை மற்றும் கல்வி பயில வெளியூர் சென்றாலும் தனித்து தனித்துணை ஆட்சியரிடம் விடுப்பு பெற்று செல்ல வேண்டும்.

இந்த நிலையில் உள்நாட்டு போர் காரணமாக இலங்கையில் இருந்து அகதியாக தனுஷ்கோடி வந்திறங்கி 2007 ஆம் ஆண்டு முதல் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜெகன் (50) என்பவர் மருத்துவ சிகிச்சைக்காகவும், உடல் நலம் சரியில்லாததால் மருத்துவ உதவிக்காக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிப்பதற்காக சென்னை செல்ல மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், விடுப்பு வழங்குவதற்கு தனித்துணை ஆட்சியர் இலஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகின்றது. ஜெகன் பணம் கொடுக்காததால் தொடர்ந்து அவருடைய விடுப்பு மனு நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று(10.09.2026) இலங்கை தமிழர் ஜெகன் தனித்துறை ஆட்சியரை சந்தித்து விடுப்பு விண்ணப்பம் தொடர்பாக கேட்க சென்றபோது தனி துணை ஆட்சியர் கலை மன்னன் இலங்கைத் தமிழர் ஜெகனை காலணியை கழற்றி அடிக்க முயன்றுள்ளார்.
இதனை வீடியோவாக பதிவு செய்த இலங்கை தமிழர் ஜெகன், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனிடையே இலங்கை தமிழரை தனி துணை ஆட்சியர் காலணியால் தாக்க முயன்றதை கண்டித்து தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தை இலங்கை தமிழர்கள் சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கைத் தமிழரை காலணியால் தாக்க முயன்ற அதிகாரி
இது குறித்து தகவலறிந்த ராமநாதபுரம் வட்டாட்சியர் காளீஸ்வரர் ஜெகன் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது, தனித்துறை ஆட்சியர் கலை மன்னன், மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், அவரை உடனடியாக பணியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் இலங்கை தமிழர்கள் விடுப்பு எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட இராமநாதபுரம் வட்டாட்சியர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரனிடம் தகவல் தெரிவிப்பதாகவும் வரும் திங்கட்கிழமை தனித்துணை ஆட்சியர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார் என உத்தரவாதம் அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு முகாமுக்குள் சென்றனர்.
மருத்துவ விடுப்பு கேட்ட இலங்கைத் தமிழரை காலணியால் தாக்க முயன்ற தனித்துறை ஆட்சியரின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டு வந்த நிலையில் இது குறித்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

சாவகச்சேரியில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்திற்கான தயார்ப்படுத்தல் - அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு