சர்வதேச நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் போராட்டம்
வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு சர்வதேச நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (26-07-2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்
இலங்கையில் இடம்பெற்ற மனித படுகொலைகள் மற்றும் இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், சர்வதேச நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வவுனியா
ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேசநீதிப் பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில் வவுனியா புதிய பேருந்து நிலையப் பகுதிக்கு முன்பாகவும் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டமானது இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதாக ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக ஈழத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு பன்னாட்டு நீதிப் பொறிமுறை ஊடான விசாரணைகள் உடன் மேற்கொள்ளப்படல் வேண்டும், இனப்படுகொலைகளுக்கான நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படாமல் உடன் மேற்கொள்ளப்படல் வேண்டும்,தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இன அழிப்பு உட்பட, பன்னாட்டு குற்றங்களை விசாரிக்கவும் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தவும் ஒரு பன்னாட்டு குற்றவியல் நீதித்துறை அமைப்பை உருவாக்கவேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை சர்வதேசம் கால இழுத்தடிப்பு செய்யாமல் உடன் சர்வதேச நீதிப் பொறிமுறையை மேற்கொள்ள வழி செய்ய வேண்டும், தமிழ் இன அழிப்பு நடந்ததை சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டும்,செம்மணி, மன்னார் மற்றும் பிற பகுதிகளில் காணப்படும் பெரும்பாலான மனிதப் புதை குழிகள் தொடர்பாக பன்னாட்டு தணிக்கை நிபுணர்களை விசாரணைக்காக அனுப்ப வேண்டும்.
தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகளை மற்றும் நில ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவேண்டும்,தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்,பயங்கர வாத தடை சட்டம் மற்றும் நிகழ் நிலை சட்டம் (PTA & Online Safety Act) இரத்து செய்ய இலங்கை அரசிற்கு பன்னாட்டு சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்திருந்தனர்.
இதேவேளை பன்னாட்டு நீதிபொறிமுறையை வலியுறுத்தி கைஎழுத்தும் திரட்டப்பட்டது.
குறித்த ஆர்பாட்டத்தில் வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்,சமூக செயற்ப்பாட்டாளர்கள்,தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள்,பொது அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
செய்தி- திலீபன்
திருகோணமலை
வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் உள்ளக நீதிப்பொறிமுறையென்பது என்றைக்கும் நியாமான தீர்வினை வழங்கப்போவதில்லை என்பதால் தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பன்னாட்டுச் சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடான நீதியைக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள், சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், சமூதாய மன்றங்களின் உறுப்பினர்கள், பெண்கள் வலையமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு "தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டும்" என்ற வாசகம் அடங்கிய பதாதைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் இறுதியில் பின்வரும் ஒன்பது கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய பின்னர் குறித்த மனுவில் கையெழுத்திட்டனர்.
கோரிக்கைகள்
1.ஈழத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பன்னாட்டு நீதிப்பொறிமுறை ஊடான விசாரணைகள் உடன் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
2.ஈழத்தமிழ் மக்களுக்கு இடம்பெற்ற இனப்படுகொலைக்கான நீதிப்பொறிமுறை நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படரமல் உடன் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
3.தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இன அழிப்பு உட்பட பன்னாட்டு குற்றங்களை விசாரிக்கவும் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தவும் ஒரு பன்னாட்டு குற்றவியல் நீதித்துறை அமைப்பை உருவாக்கவேண்டும்.
4.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை சர்வதேசம் கால இழுத்தடிப்பு செய்யாமல் உடன் சர்வதேச நீதிப் பொறிமுறையை மேற்கொள்ள வழி செய்ய வேண்டும்.
5.இலங்கையில் தமிழ் இன அழிப்பு நடந்ததை சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
6.செம்மணி, மன்னார் மற்றும் பிற பகுதிகளில் காணப்படும் பெரும்பாலான மனிதப் புதை குழிகள் தொடர்பாக பன்னாட்டு தணிக்கை நிபுணர்களை விசாரணைக்காக அனுப்ப வேண்டும்.
7.தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகளை மற்றும் நில ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவேண்டும். (இவை அரச அனுசரணையுடன் நடத்தப்படும் சிங்களமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.)
8.தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்.
9. பயங்கர வாத தடை சட்டம் மற்றும் நிகழ் நிலை சட்டம் இரத்து செய்ய அழுத்தம் கொடுக்க இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
செய்தி-கியாஸ்











