இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பிலும் போராட்டம்
இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பிலும் இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது வடக்கு, கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் இன்று காலை ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா
அதனடிப்படையில் இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பதாதையினை ஏந்தியவாறு, சம நீதி கோரிய கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன், கையொப்பமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலந்து கொண்டவர்கள்
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோரும், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.









