திருகோணமலையில் சட்டவிரோத கடற்றொழிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (Photos)
திருகோணமலை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை மற்றும் டிஸ்கோ வலைகளை
பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடை செய்யக்
கோரியும் சிறிமாபுர மீனவ குழுவினர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இன்று (11.09.2023) ஜமாலியா பகுதியில், திருகோணமலை - நிலாவெளி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தடை செய்யப்பட்ட வலைகள்
திருகோணமலை - ஜமாலியா பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களும் சமுத்ராகம பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களும் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி வருவதாகவும், இதனால் சிறிமாபுர பகுதியில் வசித்துவரும் சிறு மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர் குறிப்பிடுகின்றனர்.
குறித்த சட்டவிரோத செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட இப்போராட்ட இடத்திற்கு வருகை தந்த திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடியதையடுத்து இப்போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




