பெருந்தோட்ட மக்களை அவமானப்படுத்தியதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பெருந்தோட்ட மக்களை அவமானப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு எதிராக ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்றையதினம் (30.10.2025) தமிழ் சிவில் சமூக அமைப்பால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து திரும்பிய இலங்கை வீரர்களை வரவேற்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது.
கண்டிக்கத்தக்க அறிக்கை
இதன்போது, கலந்து கொண்ட பெருந்தோட்டப் பகுதியை சேர்ந்த ஒரு சிவில் சமூக ஆர்வலர், “பெருந்தோட்டத்துறை ஒரு பட்டினியால் வாடும் நாடு போன்றது, அந்த சமூகத்திலிருந்தே ஆசிய தடகளப் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்” என குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கருத்தை அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து, பெருந்தோட்ட மக்களிடையே கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் எழுந்திருந்தது.
இதனை எதிர்த்து இன்று ஹட்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தோட்டத் துறை மக்கள் தற்போதைய நிலையில், பொருளாதார ரீதியாக வலுவடைந்து வரும் சமூகக் குழுவாக உள்ளனர் என்றும், அவர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்கள் சமூக ஒற்றுமையையும், தோட்டத் துறை மக்களின் மரியாதையையும் பாதிக்கும் வகையில் உள்ளன என்பதையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
