பசளை நெருக்கடியை விமர்சித்த பேராசிரியர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்
பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் பேராசிரியர் புத்தி மாரம்பே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர் புத்தி மாரம்பே, பதவிகளில் இருந்து நீக்கப்படும் முன்னர் தேசிய விவசாய கொள்கை சபை, விவசாயத்தை நவீனமயப்படுத்தும் திட்டக்குழு போன்றவற்றின் ஆலோசகராக பதவி வகித்தார்.
இரசாயன பசளையை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிப்பாளராக கடமையாற்றுவதன் காரணமாக பேராசிரியர் வகித்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கமத்தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கிளைபேஃசேட் இறக்குமதிக்கு தடை விதித்த போது அதற்கு எதிராக இந்த பேராசிரியர் பணியாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என கமத்தொழில் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் சுற்றாடலுக்கு உகந்த பயிர் செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலைமையில், பேராசிரியர் மாரம்பே, அதற்கு எதிராக பல்கலைக்கழக சமூகம், சமூக அமைப்புகள் மற்றும் மக்களை அணித்திரட்டும் வகையில் கருத்து வெளியிட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.