இன்று மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்து சேவை! தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு
இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுகு விஜயரட்ண மேலும் தெரிவிக்கையில்,
இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும். இரவில் பேருந்து சேவைகள் இடம்பெறாது.
காலையிலும், மாலையிலும் பாடசாலை மாணவர்கள் அலுவலக ஊழியர்களை கருத்தில் கொண்டு பேருந்து சேவைகள் இடம்பெறும். இரவில் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 25 வீத தனியார் பேருந்துகளே தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து எரிபொருளை விநியோகிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு முன்வந்த போதிலும் இது தொடர்பில் கசப்பான விடயங்கள் இடம்பெறுகின்றன.
நாளாந்த சேவைக்கு டீசல் பெருவதில் பெரும் சிரமங்களை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளும் எதிர்கொண்டுள்ளன.
அத்துடன் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண டிப்போக்களில் இருந்தே எங்களால் எரிபொருளை பெற முடிகின்றது.
எனவே எரிபொருள் நெருக்கடி காரணமாக நீண்டதூர பேருந்து சேவை சாத்தியமற்றதாக மாறியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.