நீதிபதி நாட்டிலிருந்து வெளியேறிய விவகாரம்: கொழும்பில் பாரிய போராட்டத்திற்கு தயாராகும் சட்டத்தரணிகள்
அச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியமை இலங்கை நீதித்துறைக்கு மட்டுமல்ல சிறுபான்மை மக்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என வன்னி வலயச் சட்டத்தரணிகள் சங்கத் தலைவரும், இலங்கை சட்டத்தரணிகள் சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான பத்திநாதர் அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (04.10.2023) நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கேட்டு மனித சங்கிலி போராட்டம் இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு நீதிபதி தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியதுடன், தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே பதவி விலகியதாக தனது பதவி விலகல் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களை கண்டித்து வடக்கு, கிழக்கு சட்டத்தரணிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன் கொழும்பு சட்டத்தரணிகளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
பாரிய கவனயீர்ப்பு போராட்டம்
எதிர்வரும் ஒன்பதாம் திகதி கொழும்பு அளுத்கடை நீதிமன்றத்திற்கு முன்னாள் சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளோம்.
நீதிபதிக்காக நீதி கேட்டு இடம்பெறும் போராட்டங்களில் சட்டத்தரணிகள் என்ற வகையில் எமது வேலைகளை புறக்கணித்து ஆதரவை வழங்குவோம்.
ஆகவே முல்லைத்தீவு நீதிபதிக்காக நீதி கேட்டு இடம்பெறும் போராட்டங்களில் பொது அமைப்புகளும், மக்களும் கலந்து கொண்டு ஆதரவை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சனல் 4வை பற்றி பேசாதீர்கள்: எனது முடிவு இது: ஜெர்மனியில் ஊடகவியலாளரை எச்சரித்த ரணில் (முழுமையான தமிழாக்க காணொளி)
இதேவேளை குறித்த மனித சங்கிலி போராட்டத்தில் வட மாகாண நீதிமன்றங்களைச் சார்ந்த சட்டத்தரணிகள் பலர் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |