சிறை மோதல்கள் அலையாக மாறுமா..! நீதி அமைச்சர் ஹர்ஷன அதிர்ச்சித் தகவல்..
சிறைச்சாலை மோதல்கள் அலையாக உருவெடுக்குமா என்பது குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், சிறைச்சாலை கட்டமைப்பைத் திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில் மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மஹர சிறைச்சாலை
அவர் மேலும் உரையாற்றுகையில்,
"மஹர சிறைச்சாலையில் கடந்த 1 ஆம் திகதி மாலை 3.45 மணியளவில் மூன்று கைதிகள் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி கூச்சலிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரி அங்கு சென்று அவர்களுடன் பேச்சு நடத்திய போதிலும், ஒரே நேரத்தில் சுமாராக ஆயிரம் கைதிகள் ஒன்றுகூடி கலகம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
இதனைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஆயுதங்களைப் பாதுகாப்பாக மறைத்துவிட்டு பிரதான இரும்பு வாசல்களை மூடியுள்ளனர். எனினும், கைதிகள் கதவுகள் மீது கற்களால் தாக்குதல் நடத்தியதுடன், சமையலறை, உணவு உண்ணும் இடம், வைத்தியசாலை, பதிவுப் பிரிவு மற்றும் அலுவலகப் பகுதிகளைச் சேதப்படுத்தியும் தீ வைத்தும் அழித்துள்ளனர்.
பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
நீர்கொழும்பு சிறைச்சாலை
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் கைதிகளுக்கு இடையிலான முரண்பாடாக இருந்தபோதிலும், மஹர சிறைச்சாலையில் அவ்வாறான தன்மை காணப்படவில்லை. ஒரே கட்டத்தில் ஆயிரம் பேர் ஒன்றுகூடியமை சந்தேகத்துக்குரியது.
கைதிகள் கூண்டுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக, சமையலறை, உணவு உண்ணும் இடம் மற்றும் வைத்தியசாலை போன்றவையே திட்டமிட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

மஹர சிறைச்சாலை மோதலுக்கு வெளியாள்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்காலிக ஏற்பாடாக வேறு சிறைச்சாலைகளில் உணவு சமைக்கப்பட்டு மஹர சிறைக் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
நெருக்கடிகளுக்குத் தீர்வு
சிறைச்சாலையின் சொத்துகளுக்குத் தீ வைத்து அழிக்கப்பட்டமை மக்களின் வரிப்பணத்தையே பாதிக்கின்றது என்பதைக் கைதிகளின் உறவினர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிறைச்சாலை கட்டமைப்பில் நிலவும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண எனது தலைமையில் அமைச்சரவைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறைச்சாலை மோதல்கள் அலையாக உருவெடுக்குமா என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மூன்று சிறைச்சாலைகள் தொடர்பில் விசேட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய சிறைச்சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.