அரசாங்கம் மாணவர்களின் நலன்கருதி செயற்பட வேண்டும் - எஸ்.எஸ்.உதயகுமார்
தற்போதைய கோவிட் தாக்க நிலையைக் கருத்தில் கொண்டு அதிபர், ஆசிரியர்களும், அரசாங்கமும் மாணவர் நலன்கருதி செயற்பட வேண்டும் என யாழ்.பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான எஸ்.எஸ்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அன்புக்கும், நட்புக்குமான இளைஞர் வலையமைப்பின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் கி.வசந்தரரூபனின் நெறிப்படுத்தலில் 'நாட்டின் பொருளாதார நிலையும் கோவிட் தாக்கமும்' என்ற தலைப்பின் கீழ் இளைஞர், யுவதிகளுடன் இடம்பெற்ற இலத்திரனியல் ஊடகம் ஊடான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு தொழிற்சங்க போராட்டத்தைக் கொச்சைப்படுத்த முடியாது. குறிப்பாக இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளது. அவ்வாறு செய்தது நல்ல விடயமாக இருந்தாலும் செய்த காலம் பொருத்தமானதாக அமையவில்லை. எதிரிக்கு அடிப்பதாக இருந்தாலும் அவன் நோய் வாய்ப்பட்டிருக்கும் போது அடிக்கக்கூடாது.
அதேபோல் அதிபர், ஆசிரியர்கள் சம்பள உயர்வு கோரி அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள போதும், இந்த நேரம் அது பிழை எனச் சொல்லலாம். ஆனால் மற்ற பக்கம் பார்க்கும் போது இவ்வாறான நிலைகளினை சாதகமாகப் பயன்படுத்தினால் தான் தீர்வு கிடைக்கும் என்ற நிலையும் தொழிற்சங்கங்களிடம் உள்ளது.
அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை ஊடாக இதனைத் தீர்க்க வேண்டும். தற்போதைய நிலையில் சம்பள உயர்வு தர முடியாது. கோவிட் தாக்கம் முடியும் வரை சம்பள உயர்வு கோரி அதிக அழுத்தம் தர வேண்டாம்.
ஆனால் நாம் தற்போதே சம்பள உயர்வுக்கான அமைச்சரவை அனுமதியைப் பெறுகின்றோம் எனக் கூறி அரசாங்கம் இந்த விடயத்தைக் கையாள முடியும். 2012 ஆம் ஆண்டு பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஒரு போராட்டம் செய்த போது அவ்வாறான ஒரு தீர்வே வழங்கப்பட்டது. உடனடியாக தரமுடியாது.
5 வருடத்திற்குள் செய்து தரலாம் எனக் கூறி அதனைச் செய்திருந்தார்கள். அதுபோல் தற்போதும் அதிபர், ஆசிரியர் சம்பளப் பிரச்சனையைச் செய்ய முடியாது. கோவிட் முடிந்த பின் 2023இல் அல்லது பொருத்தமான ஒரு காலத்தைக் குறிப்பிட்டு அதிலிருந்து ஆரம்பிக்கின்றோம். இது தான் சம்பளம். சம்பள நிலுவைகளையும் சேர்த்து வழங்குவோம் என ஒரு உறுதி மொழியை அரசாங்கம் வழங்க முடியும்.
அதைவிடுத்து போராட்டத்தை அடக்க முற்பட்டால் தொழிற்சங்க போராட்டம் மேலும் வலுவடையும். மாணவர்கள் நலன் கருதி போராட்டம் மற்றும் பேச்சுவார்த்தை எனக் காலத்தை இழுத்தடிக்காது விரைவாக இரு பகுதியினரும் செய்ய முடியும்.
சம்பள உயர்வு வழங்கும் திகதியை உரிய வகையில் அறிவித்து இரு பகுதியினரும் பாதிக்காத வகையில் செயற்பட வேண்டும். இதை வைத்து சில அரசியல்வாதிகளும் அரசியல் செய்ய முற்படுவார்கள்.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்குத் தீர்வு வழங்கினால் வேறு தொழிற்சங்கங்களும் சம்பள உயர்வு கோரி போராடலாம் என்ற தர்மசங்கட நிலை அரசாங்கத்திற்கும் உள்ளது. எனவே, நிலைமையைப் புரிந்து இரு பகுதியினரும் மாணவர்களின் நலன்களைக் கருதிச் செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
