நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் வழங்கும் அறிவுரை
தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் தாம் மக்களின் பிரதிநிதிகள் என்பதை மறக்கக் கூடாது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
10ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மூன்று நாள் செயலமர்வு இன்றையதினம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கிய மக்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாம் இந்த நாடாளுமன்றத்தில் எதற்காக இருக்கிறோம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் அதிக பெண் பிரதிநிதித்துவத்துடன் 22 பெண் உறுப்பினர்கள் உள்ளனர்.
225 இடங்களில், 162 இடங்கள் புதிய உறுப்பினர்களால் நிரப்பப்பட்டன. புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றம் என்று அழைக்கப்படும் இந்த உயர் மன்றம் கடந்த காலங்களில் மக்கள் வெறுப்பை பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நிராகரிக்கப்பட்டனர்.
225 பேரும் ‘தேவைஇல்லை’ என்று மக்கள் கருதினார்கள். இதுபோன்ற கருத்துக்களின் அடிப்படையில், மக்கள் இந்த நாடாளுமன்றத்தை பொதுத் தேர்தலின் ஊடாக உருவாக்கினார்கள்.
எனவே நாம் பொதுமக்களின் பிரதிநிதிகள் என்பதை மறந்துவிடக் கூடாது. அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகள் எதுவாக இருந்தாலும், நாம் மக்களின் பிரதிநிதிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.