கட்சியின் தோல்விக்கு விக்கியே காரணம் : பகிரங்கப்படுத்தும் கூட்டணி
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியின் பாரிய பின்னடைவுக்கு சி.வி. விக்னேஸ்வரனின் (C. V. Vigneswaran) மதுபானசாலை அனுமதிப்பத்திரம் விவகாரம் தான் மிகப் பெரிய காரணம் என தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் வ.பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் குறிப்பிட்டார்.
பாரிய பின்னடைவு
மேலும் தெரிவிக்கையில், "என்றும் இல்லாத வகையில் எல்லாக் கட்சிகளையும் விட நாங்கள் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியமைக்கான காரணம் சி.வி. விக்னேஸ்வரனின் மதுபானசாலை அனுமதிப் பத்திரம் விவகாரம்தான்.
உண்மையை வெளியில் சொல்லத்தான் வேண்டும். அத்தோடு இதனை நான் அவரிடமும் நேரடியாகத் தெரிவித்து இருக்கின்றேன்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் நாங்கள் இருந்திருந்தால் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்க முடியும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அத்தோடு, இன்றும் நான் அந்தக் கட்சியில் இருந்து பிரியவில்லை. அந்தக் கட்சியைச் சாந்தவர்கள்தான் என்னைக் கட்சியை விட்டு விலக்கி வைத்தனர்.
யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்கள்
தமிழ் மக்கள் அருவருப்பான அரசியல் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டமைக்கு காரணம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான்.
அடுத்த கட்சிகளைத் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருக்கையில் தற்போது தேசிய மக்கள் சக்தியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை வென்று விட்டனர்.
இந்தநிலையில், தமிழ் மக்கள் கூட்டணி இனி தேர்தல் அரசியல் என்று வரும்போது தனித்து நில்லாது கூட்டாகச் செயற்படுவதுதான் எமது நோக்கம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |