ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது சர்வதேச அழுத்தம்
இலங்கை அரசாங்கம் வழங்கிய மனித உரிமைகள் சீர்திருத்த வாக்குறுதிகளை உடனடியாக உறுதியான நடவடிக்கைகளாக மாற்ற வேண்டும் என இங்கிலாந்து தலைமையிலான 'இலங்கைக்கான முக்கிய குழு' வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 63வது கூட்டத்தொடரில், இங்கிலாந்தின் மனித உரிமைகளுக்கான தூதர் எலினோர் சாண்டர்ஸ் இங்கிலாந்து, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகளின் சார்பில் இந்த கூட்டறிக்கையைச் சமர்ப்பித்தார்.
உடன்படிக்கையில் காட்டிய ஈடுபாடு
பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு எதிரான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) 190வது உடன்படிக்கையை இலங்கை ஏற்றுக்கொண்டதையும், மாற்றுத்திறனாளிகள் உரிமை உடன்படிக்கையில் காட்டிய ஈடுபாட்டையும் இந்த குழு வரவேற்றுள்ளது.
அத்துடன் காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பது, கூட்டுக்குழிகள் கண்டறியப்படுவது, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் குறித்தும் இந்த குழு பெரும் கவலையை தெரிவித்தது.

வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்
பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட பொறுப்புக்கூறல் செயல்முறையை முன்னெடுப்பது, நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, தடுப்புக்காவல் நிலையங்களில் மனித உரிமைகளைப் பேணுவது மற்றும் சுயாதீன நிறுவனங்களை வலுப்படுத்துவது போன்ற சட்ட சீர்திருத்தங்களை உடனே மேற்கொள்ள இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் மீண்டும் சர்வதேச கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.